தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையில்லா இளையரின் விகிதம் 46.5% விழுக்காட்டை எட்டியிருக்கலாம்: சீனப் பேராசிரியர்

2 mins read
d16157aa-b698-4e7d-ab75-d06551d45730
சீனாவில் இளையரின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதம் 50 விழுக்காட்டை நெருங்கியிருக்கலாமென சீனப் பேராசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். - படம்: இபிஏ

பெய்ஜிங்: சீனாவில் இளையரின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதம் 50 விழுக்காட்டை நெருங்கியிருக்கலாமென சீனப் பேராசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். 

பதினாறு வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டோரின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 19.7 விழுக்காடாக இருந்ததாக தேசிய புள்ளிவிவரத்துறை தெரிவித்தது. பீக்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாங் டாண்டாண் வெளியிட்ட கணிப்பில் இது பாதிக்கும் குறைவு. 

வீட்டில் “படுத்துக் கிடக்கும்” அல்லது பெற்றோரைச் சார்ந்திருக்கும் மாணவர் அல்லாத 16 மில்லியன் இளையர்களையும் கணக்கில் சேர்த்தால், வேலையின்மை விகிதம் 46.5 விழக்காடு வரை இருக்கலாம் என்று “சாய்சின்” எனும் இணைய நிதி இதழில் பேராசிரியர் ஜாங் எழுதிய கட்டுரை தெரிவித்தது. 

பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் இணைப் பேராசிரியராக இருக்கும் திருவாட்டி ஜாங்கின் கட்டுரை திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் அது அகற்றப்பட்டுவிட்டது. 

வேலை தேடுவோரை மட்டுமே உள்ளடக்கும் அதிகாரபூர்வமான இளையர் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் சாதனை அளவாக 21.3 விழுக்காட்டை எட்டியது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளியலை நிலைப்படுத்த அரசாங்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். 

“வேலை நியமனம் கொவிட் பரவலுக்கு முன்பிருந்ததில் மூன்றில் இருபங்கு மட்டுமே மார்ச் வரை மீண்டிருந்தது. உற்பத்தித் துறையில் இளையர்களே பெரும்பான்மை ஊழியர்களாக இருப்பதால், அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்,” என்று பேராசிரியர் ஜாங் எழுதியிருந்தார். 

அதோடு, துணைப்பாடம், சொத்து, இணையத்தள துறைகளில் 2021 முதல் அறிமுகமான விதிமுறைகளால் அதிகம் படித்தவர்களும் இளைய ஊழியர்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

இந்நிலையில், வேலையின்மை புள்ளிவிவரங்களைக் கணிக்கையில் வேலை தேடாதவர்கள் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மற்ற பலரும் சீனாவில் வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தைச் சுட்டிக்காட்டினர். 

குறிப்புச் சொற்கள்