மயாமி: கோழி நகட் ஒன்று தொடைமீது விழுந்ததால் சூடுபட்ட ஏழு வயது சிறுமிக்கு ஃபுளோரிடா நீதிமன்றம் புதன்கிழமை $1.06 மில்லியன் இழப்பீடு வழங்கியது.
இந்தச் சம்பவம் 2019ல் நிகழ்ந்தது. அப்போது நான்கு வயதாக இருந்த அந்தச் சிறுமியின் பெற்றோர், தங்களது காரில் இருந்தபடியே மெக்டோனல்ட்ஸ் கடையிலிருந்து கோழி நகட் வாங்கி, பின் இருக்கையில் இருந்த சிறுமியிடம் கொடுத்தனர். அப்போது, ஒரு துண்டு நகட் சிறுமி ஒலிவியா காராபலோவின் மடியில் விழுந்து, தொடையில் தீக்காயம் ஏற்பட்டதாக அவளது பெற்றோர் கூறினர்.
ஒலிவியாவுக்கு ஏற்பட்ட வலி, அவதி, மன உளைச்சல் அனைத்திற்கும் ஒலிவியாவின் பெற்றோர் 15 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கோரினர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒலிவியாவுக்கு ‘முழு நீதி’ வழங்கிவிட்டதாக ஒலிவியா குடும்பத்தினரின் தலைமை வழக்கறிஞர் திரு ஜோர்டன் ரிடேவிட் கூறினார்.
“இது வழக்கே இல்லை என்றும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் பிரதிவாதிகள் கூறி வந்தனர்,” என்றார் அவர். மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் பரிந்துரைத்த 156,000 டாலரைவிட நீதிமன்றம் அதிக இழப்பீடு வழங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஒலிவியா பெரியவளாகும்வரை இழப்பீட்டுத் தொகை நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் இருக்கும்.

