சோல்: கப்பலில் இருந்து ஏவுகணைகளை வடகொரியா வீசியதாக தென்கொரிய ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் (சிங்கப்பூர் நேரம் அதிகாலை 4 மணி) இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அது குறிப்பிட்டது. கொரிய தீபகற்பத்தின் மேற்குக் கடற்பகுதியை நோக்கி அடுத்தடுத்து பல ஏவுகணைகள் வீசப்பட்டதாக தென்கொரிய ராணுவத்தின் இணைத் தளபதிகள் கூறினர்.
புதன்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை வீசிய வடகொரியாவின் ஆக அண்மைய செயல் இது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“ஏவுகணைகளைத் தொடுத்து வரும் வடகொரியாவின் செயல்களை தென்கொரிய, அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். வடகொரியாவின் அடுத்த நகர்வுகளுக்கான அறிகுறிகளையும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
புதன்கிழமை அமெரிக்காவின் அணுவாயுத ஏவுகணை நீர்மூழ்கி தென்கொரிய கடற்பரப்பில் காணப்பட்டதைத் தொடர்ந்து வடகொரியா அன்றைய தினம் ஏவுகணைகளை வீசியது.
அமெரிக்காவும் வடகொரியாவும் இவ்வாறு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலம் தென்கொரிய தீபகற்பத்தைப் பதற்றம் தொற்றிக் கொண்டு உள்ளது. அதேநேரம் தென்கொரியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தி வருகின்றன.