பேங்காக்: காட்7 (Got7) என்ற கே-பாப் இசைக் குழுவைச் சேர்ந்த கலைஞர் ஜாக்சன் வாங்கிற்கு தாய்லாந்தில் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அந்தக் கலைஞர் ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
அவரைச் சுற்றி குடிநுழைவு காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்து வந்தனர்.
அந்த கே-பாப் பாடகரைக் காண்பதற்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் விமான நிலையத்தில் குழுமி இருந்ததை சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் காட்டின.
அந்தக் கலைஞர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் புறப்பாட்டுக்கூடம் வழியாக நடந்து சென்றதையும் அந்தக் காணொளியில் காண முடிந்தது.
ஆனால், விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் அந்தப் பாடகரை சிறப்பாக கவனிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குடிநுழைவு முகப்புகளில் இதர பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று என்று பேங்காக் போஸ்ட் தெரிவித்தது.
பல பயணிகளும் புகார் தெரிவித்ததால் தாய்லாந்தின் குடிநுழைவு இலாகா ஒன்பது காவல்துறை அதிகாரிகளை மந்தமான காவல் சாவடிகளுக்குப் பணியிடமாற்றம் செய்துவிட்டதாக தி நேஷன் என்ற தாய்லாந்து செய்தித்தாள் தெரிவித்தது.
பாப் பாடகர் வாங்கிற்கு தாய்லாந்தில் ரசிகர்கள் அதிகம். அவர் ‘மேஜிக் மேன்’ என்ற தன்னுடைய உலக இசைப் பயணத்தை 2022 நவம்பரில் பேங்காக் நகரில் இருந்து தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வாங் சிங்கப்பூருக்கு டிசம்பரில் வந்திருந்தார்.
மான்செஸ்டர் யுனைடெட்-லிவர்பூல் இரு அணிகளுக்கும் இடையில் 2022ல் நடந்த காற்பந்துப் போட்டியின்போது வாங்கின் நிகழ்ச்சி நடந்தது. அது முதல் தாய்லாந்தில் அவருக்கு ஆதரவு பெருகியது.

