ஏதென்ஸ்: கிரீசின் ரோடஸ் தீவில் கடுமையான காட்டுத் தீ மூண்டதையடுத்து 30,000 பேரைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடற்கரையில் இருந்து படகு மூலம் வெளியேற்றப்பட்ட 2,000 பேரும் அவர்களில் அடங்குவர்.
கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் சாலைகள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இரவுநேரத்தில் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போராடிய வேளையில், உள்ளூர்வாசிகளும் சுற்றுப் பயணிகளும் உடற்பயிற்சிக் கூடங்கள், பள்ளிகள், ஹோட்டல் கருத்தரங்கு நிலையங்கள் போன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கடலோரக் காவற்படை, ஆயுதப் படை, உள்ளூர் அரசாங்கத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள், மீட்கப்பட்டோரைப் பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
கடலோரக் காவற்படையின் படகுகளுடன் தனியார் படகுகளும் மீட்புப் பணியில் உதவின. ரோடஸ் துறைமுகத்தில் மூன்று படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி அவற்றில் மீட்கப்பட்டவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சாலைகள் துண்டிக்கப்பட்டதால் சுற்றுப் பயணிகள் சிலர் நடந்தே பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
ரோடஸ் தீவில் இத்தகைய சூழல் இதற்குமுன் ஏற்பட்டதில்லை என்று அதிகாரிகள் கூறினர்.