கம்போடியாவில் தேர்தல்: பிரதமர் ஹுன் சென் வாக்களித்தார்

கம்போடியாவில் தேர்தல்: பிரதமர் ஹுன் சென் வாக்களித்தார்

2 mins read
96befc4a-84b0-4f94-8361-d5f55cea15b3
கம்போடிய பிரதமர் ஹுன் சென், 70, ஞாயிற்றுக்கிழமை தலைநகர் நோம் பென்னில் காண்டல் என்ற மாவட்டத்தில் செயல்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு போட்டார். - படம்: ஏஎஃப்பி

நோம்பென்: கம்போடியப் பிரதமர் ஹுன் சென், 70, ஞாயிற்றுக்கிழமை வாக்களித்தார். கம்போடியாவில் தேர்தல் வாக்களிப்பு நடந்தது. அதில் ஹுன் சென்தான் வெற்றி பெறுவார் என்பது ஏற்கனவே ஏறக்குறைய நிச்சயமாகிவிட்டது.

திரு ஹுன் சென், தலைநகர் நோம் பென்னில் காண்டல் என்ற மாவட்டத்தில் செயல்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு போட்டார்.

கெமர்ரூஜ் தரப்பின் முன்னாள் முக்கிய புள்ளியான அவர், இந்த முறை வென்றதும் ஆட்சி அதிகாரத்தை தன் மகன் வசம் ஒப்படைக்க திட்டம் போடுகிறார்.

தேர்தலில் ஹுன் சென்னுக்குப் போட்டி என்று களத்தில் யாரும் இல்லை.

எதிர்க்கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எதிர்ப்பாளர்கள் ஓட ஓட விரட்டப்பட்டுவிட்டனர். பேச்சு சுதந்திரம் நசுக்கப்பட்டுவிட்டது.

நாடாளுமன்றக் கீழவையில் இருக்கும் 125 இடங்களையும் திரு ஹுன் சென்னின் கம்போடிய மக்கள் கட்சி தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

ஆகையால் கம்போடியாவில் நீண்ட நெடுங்காலத்திற்கு ஹுன் சென் ஆட்சிதான் தொடரும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு அவர் ஆட்சி அதிகாரத்தில் தன் புதல்வரை அமர்த்துவார் என்று நம்பப்படுகிறது.

கம்போடியாவின் ஹுன் சென் ஆட்சியை சிலர் வடகொரிய அரசியலுடன் ஒப்பிட்டு இருக்கிறார்கள்.

கம்போடியாவில் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கும் ஒரே ஒரு கட்சியும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டது.

நண்டும் சிண்டுமாக களத்தில் இருக்கும் இதர 17 கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி வென்றால்கூட அது அரசியல் களத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கம்போடியாவில் நடந்துவந்த உள்நாட்டுக் கவவரங்கள், படுகொலைகளின் விளைவாக நாடே சின்னபின்னமாகிவிட்டது.

அதையடுத்து ஐநா மேற்பார்வையின்கீழ் 1993ஆம் ஆண்டில் தேர்தல் நடந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது ஏழாவது தேர்தல் நடக்கிறது. இதில் 9.7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

கம்போடியாவில் பல கட்சி ஜனநாயகம் ஏற்படும் என்று கடந்த 30 ஆண்டு காலமாக அனைத்துலகச் சமூகம் எதிர்பார்த்து வந்துள்ளது.

ஆனால் ஹுன் சென் ஆட்சி அதை தவிடுபொடியாக்கிவிட்டது.

கம்போடியாவில் நெடுங்காலமாக பிரதமர் பதவியை வகித்துவரும் ஹுன் சென், இனிமேல் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கப்போவதாக அண்மையில் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்த பிறகு சில நாட்களுக்கு உள்ளேயே ஆட்சி அதிகாரத்தை தன் புதல்வரிடம் மாற்றி ஒப்படைக்கப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

ஹுன் மானெட், 45, என்ற அந்தப் புதல்வர் ராணுவத்தில் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல் ஆவார்.

கம்போடிய மக்கள் கட்சிக்குத் தலைமை ஏற்று இவரே இந்தத் தேர்தலில் கட்சியை முன்நடத்தினார்.

கம்போடியாவுக்கு இனி வெற்றிதான் என்று வெள்ளிக்கிழமை கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தின்போது ஜெனரல் ஹுன் மானெட் முழங்கினார்.

குறிப்புச் சொற்கள்