தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய், எரிவாயு: ஜி20 அமைச்சர்கள் பேச்சில் கருத்திணக்கம் இல்லை

3 mins read
5c0b3923-957b-455e-87dc-4f6d70a1f89c
அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் பல பகுதிகளில் வெப்பநிலை கூடி இருக்கும் நிலையில், கோவாவில் ஜி20 அமைச்சர்கள் சந்தித்தனர். - படம்: ஏஎஃப்பி

காந்திநகர்: எண்ணெய், எரிவாயு போன்ற எரிபொருள் பயனீடுகளைக் கட்டம் கட்டமாகக் குறைத்துக்கொள்வதன் தொடர்பில் ஜி20 நாடுகளிடையே கருத்திணக்கம் இல்லை.

இந்தியாவில் நடந்த ஜி20 எரிசக்தி அமைச்சர்கள் சந்திப்பில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பருவநிலை தொடர்பில் இந்த ஆண்டில் முக்கியமான உச்சநிலை கூட்டங்கள் நடக்கவிருக்கின்றன.

இந்தச் சூழலில், பருவநிலை அரசதந்திர முயற்சிகிளில் இடம்பெறக்கூடிய முன்னேற்றங்கள் இதுவரை மிகவும் மந்தமாக இருக்கின்றன.

ஜி20 கூட்டத்தில் எண்ணெய், எரிவாயு ஆகிய எரிபொருள் பயனீட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக சில நாடுகள் ஒப்புக்கொண்டன.

ஆனால், கரிமக்கழிவு தொடர்பிலான மிரட்டல்களைப் புதுப்புது தொழில்நுட்பங்கள் மூலம் சமாளித்துவிட முடியும் என்று இதர நாடுகள் வாதிட்டன என்று இந்தியாவின் எரிசக்தித் துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இப்படி தெரிவிக்கப்பட்ட இரு தரப்பு வழிகளையும் யோசித்து பார்க்கையில் பொருத்தமாகவே தெரிகின்றன என்றாரவர்.

மொத்தத்தில் பார்க்கையில், பருவநிலை மிரட்டல்களைச் சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அனைத்து உறுப்பினர்களுமே அந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டனர் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜி20 அமைப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்தியாவின் கோவா மாநிலத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

ஜி20 தலைவர்களின் சந்திப்பு செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து டிசம்பரில் துபாயில் காப்28 என்ற கருத்தரங்கம் நடக்கவுள்ளது.

இதற்கு முன்னதாக எரிசக்தித் துறை உருமாற்றம் தொடர்பில் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற நோக்கத்துடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது.

ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களின் பல பகுதிகளிலும் வெப்பநிலை கூடி இருக்கிறது.

அனல்காற்று காரணமாக இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் பலர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பருவநிலை பாதிப்புகளைக் குறைக்க அவசரமாகச் செயல்பட வேண்டி இருக்கிறது.

உலகில் ஆக அதிகமாக கரிமக்கழிவை வெளியேற்றும் அமெரிக்காவும் சீனாவும் கடந்த வாரத்தில் பேச்சு நடத்தின. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அமெரிக்க பருவநிலை பிரமுகர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.

இதனிடையே, சனிக்கிழமை கோவாவில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள், உக்ரேனை ஆக்கிரமித்த ரஷ்யாவை ஒருமித்த குரலில் குறைகூறத் தவறிவிட்டனர்.

உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்ததன் காரணமாக உலகளாவிய அளவில் எரிபொருள் விநியோகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டு பல நாடுகளும் சங்கடத்திற்கு உள்ளாயின.

கோவா ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனின் பொருளியல் துறை அமைச்சர் ராபர்ட் ஹாபெக், ரஷ்ய எரிசக்தி அமைச்சர் பாவல் சோரோகின் மீது புகார் தெரிவித்தார்.

எண்ணெய், எரிவாயுவுக்கு மாற்றான இதர வகை எரிபொருள் வளத்தை 2030வது ஆண்டு வாக்கில் மூன்று மடங்காக்க வேண்டும் என்று ஓர் இணக்கம் காணப்பட்டு இருக்கிறது.

ஆனால், இதை சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. மிக முக்கியமான கச்சா பொருள்கள் தொடர்பான அதிக ஒத்துழைப்பு தேவை என்ற கோரிக்கையை சீனா ஏற்கவில்லை என்று திரு ஹாபெக் கூறினார்.

இருந்தாலும் எரிசக்தித் துறை உருமாற்றத்திற்கு நிதி வளங்கள் கிடைப்பது எளிதாக வேண்டும்; புதுப்புது தொழில்நுட்பங்கள் காணப்பட வேண்டும்; எரிசக்தியை எட்டுவதற்கு உலகளாவிய ஏற்பாடுகள் வேண்டும் என்பதில் கோவாவில் நடந்த ஜி20 பேச்சில் இணக்கம் ஏற்பட்டதாக அந்தக் கூட்டம் பற்றிய அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்