முதலையின் வயிற்றில் மனித உடற்பாகங்கள்

1 mins read
959dc67a-361c-447b-9b98-0f0c7d393384
ஜூலை 19ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் படகு ஏறச் சென்ற ஆடவரை முதலை தாக்கியதாகக் கூறப்பட்டது. - படம்: த ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் வனவிலங்குத் துறையினர் ஒரு முதலையைச் சுட்டுக் கொன்றனர். அதன் வயிற்றில் இருந்து 60 வயது முதியவரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அம்முதியவர், ஏற்கெனவே காணாமற்போனதாகக் கூறப்பட்ட திரு அட்டி பங்சா. ஜூலை 19ஆம் தேதி கம்போங் சுங்காய் மஸ் மஸ் எனும் இடத்தில் உள்ள ஆற்றில் அவர் காணாமற்போனதாகக் கூறப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் தனது படகில் ஏறச் சென்றபோது முதலை அவரைத் தாக்கியது.

திரு அட்டியின் உடற்பாகங்கள் வனவிலங்குத் துறையினரால் சுடப்பட்ட முதலையின் வயிற்றில் காணப்பட்டன. 4.29 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலையின் எடை 800 கிலோ என்று சாபா தீயணைப்பு, மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அந்த முதலை சுட்டுக் கொல்லப்பட்டது. திரு அட்டியின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டன. குடும்பத்தினர் அந்த உடற்பாகங்கள் திரு அட்டியினுடையவை என்று உறுதிசெய்த பிறகு அவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

ஜூலை 19ஆம் தேதி முதியவர் காணாமற்போனதை அடுத்து, ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் சுற்றுப்பகுதியில் தேடல் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்