இஸ்கந்தர் புத்ரி: ஜோகூரில் இஸ்கந்தர் புத்ரியில் தஞ்ஜுங் பெலிபாஸ் நெடுஞ்சாலைக்கும் ஃபாரஸ்ட் சிட்டிக்கும் இடைப்பட்ட 25 மீட்டர் நீள சாலைப் பகுதி ஞாயிற்றுக்கிழமை உள்வாங்கிக் கொண்டது.
அது பற்றி பிற்பகல் 2.09 மணிக்குச் செய்தி கிடைத்ததாக இஸ்கந்தர் புத்ரி தீயணைப்பு, மீட்புத் துறை தளபதி ஹைருல்நிசாம் முகம்மது நோ கூறினார்.
தீயணைப்பாளர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். அங்கு சென்று பார்த்தபோது சுமார் 25மீ. நீள பிரதான சாலையும் ஒரு பாலமும் இடிந்து கிடந்ததை அவர்கள் கண்டதாக அந்த அதிகாரி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பிறகு, போக்குவரத்து கட்டுப்பாட்டு ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் இந்த விவகாரம் பற்றி காவல்துறையிடம் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
சாலை உள்வாங்கிய சம்பவத்தை இஸ்கந்தர் புத்ரி காவல்துறை உதவி ஆணையர் ரஹ்மத் அரிஃபின் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, 2ஃபாரஸ்ட் சிட்டி திட்ட ஊழியர்களும் தொழில் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக கன்ட்ரி கார்டன் பசிபிக்வியூ தெரிவித்தது.
அரசாங்கத் துறைகளுடன் செயல்பட்டு தேவையான செயல்களைச் செய்யப்போவதாக அது மேலும் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரம் பற்றிய மேல் தகவல்கள் ஃபாரஸ்ட் சிட்டியின் அதிகாரபூர்வ சமூக ஊடகத் தளத்தில் வெளியிடப்படும் என்றும் அது மேலும் கூறியது.

