தோக்கியோ: ஜப்பானில் ஆறு வயது சிறுவன் அடித்தே கொல்லப்பட்டான். இதன் தொடர்பில் சிறுவனின் தாயார் மற்றும் உறவினர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறுவனான நாவோ ஹேசாகா அடித்துக்கொல்லப்பட்டு ஒரு கைப்பெட்டியில் அடைத்து வீட்டுக்கு அருகில் உள்ள புல்தரையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் நாவோவின் தாயார் சாகி ஹோசாகா, 34, அவரது சகோதரர் டைசி, 32, அவரது இரட்டை சகோதரிகள், 30, டோமோமி-அஸாகா ஆகியோர் சந்தேக நபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாவோ உட்பட ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் 57 வயது பாட்டியும் வீட்டில் வசித்து வந்தார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
சாகி கைது செய்யப்படுவதற்கு முன்பு வீட்டில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள புல்வெளிக்கு விசாரணையாளர்களை அழைத்துச் சென்று கைப்பெட்டி புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டினார். கைப்பெட்டியில் நாவோவின் உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது என்று ஜப்பானிய ஊடகமான ஜப்பான் டைம்ஸ் தெரிவித்தது.
தானும் தனது நான்கு உறவினர்களும் சேர்ந்து வீட்டிலிருந்து உடலை கைப்பெட்டியில் எடுத்துச் சென்றதாக காவல்துறையிடம் சாகி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் நாவோ படிக்கும் பாலர் பள்ளி ஊழியர்கள் அவரது தோள்களிலும் பின்புறத்திலும் காயங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
மே மாதத்தில் நாவோ உதவி கேட்டு அழுவதையும் அக்கம்பக்க குடியிருப்பாளர்கள் பார்த்துள்ளனர். வீட்டிலிருந்து பல பிரம்புகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் ஜூலை 20ஆம் தேதி இரும்புக் கழியால் தாக்கப்பட்ட பாட்டி யாரும் இல்லாத சமயத்தில் வீட்டிலிருந்து தப்பினார். இந்த விவகாரத்தில் நான்கு சந்தேக நபர்களையும் காவல்துறை கைது செய்தது. ஜூலை 13ஆம் தேதி சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.