ரோடஸ், கிரீஸ்: கிரீசின் பல பகுதிகளில் திங்கட்கிழமை காட்டுத் தீ பற்றி எரிந்தது. கோர்ஃபூ தீவின் கடற்கரையிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
வார இறுதியில் ரோடஸ் தீவின் ஹோட்டல்கள், உல்லாச விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
சென்ற புதன்கிழமையிலிருந்து ரோடஸ் தீவில் காட்டுத் தீ எரிந்துகொண்டுள்ளது.
பிரிட்டனிலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் செல்லும் சுற்றுப்பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் இடங்களில் ரோடஸ் தீவும் கோர்ஃபூ தீவும் அடங்கும்.
கிட்டத்தட்ட ஏழு நாள்களாகியும் தீயைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று ரோடஸ் தீவின் துணை மேயர் கூறினார்.
சுற்றுப்பயணம் சென்று கிரீசில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டினரைத் தாயகம் மீட்டுச்செல்லும் விமானங்களுக்காக இரவு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையங்களில் காத்திருந்தனர்.
பிரிட்டனில் இருந்து ரோடஸ் தீவிற்குச் செல்லும் சுற்றுப்பயண விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரோடஸ் தீவிலிருந்து லண்டனுக்கு பயணிகளை மீட்டுவர கூடுதல் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோர்ஃபூ தீவிலிருந்து கடல் வழியாகப் பலர் வெளியேற்றப்படுவதாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை 59 பேர் அவ்வாறு மீட்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்தீவின் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிவதைப் படங்கள் காட்டுகின்றன.
ரோடஸ் தீவில் கொளுத்தும் வெயிலில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் பொருட்டு பல மைல் தூரம் நடந்தே சென்றதாக சில சுற்றுப்பயணிகள் கூறினர்.
காட்டுத் தீயால் மரங்கள் கருகியிருப்பதையும் சாலைகளில் தீக்கிரையான கார்களுக்கு அருகே மாண்ட விலங்குகளைக் காண முடிந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கிரீசின் பல்வேறு இடங்களில் சென்ற வாரம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைக் கடந்தது. உயர் வெப்பநிலை மேலும் சில நாள்கள் தொடருமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.

