நோம்பென்: ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான கம்போடிய மக்கள் கட்சி (சிபிபி) பெற்றிருக்கும் வெற்றி வரலாற்றுத் தலைமை மாற்றத்திற்கான பாதையைச் சுமுகமாக்கியுள்ளது.
ஹூன் சென்னின் மூத்த மகனான 45 வயது ஹுன் மானேட் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.
38 ஆண்டுகள் கம்போடியாவை ஆண்டு, உலகின் மிக நீண்ட காலம் பிரதமாகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்ற 70 வயது ஹூன் சென்னின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
பதவிப் பிரமாணம் எப்போது நடைபெறும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஹூன் மனேட் அடுத்த மாதம் பிரதமராகலாம் என ஹூன் சென் கூறியுள்ளார்.
அடுத்த ராணுவ ஜெனரல் யார், தலைமைத்துவ மாற்றத்திற்குப் பிறகு அவரது தந்தை பின்னணியில் இருப்பாரா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூன் மானெட் பிரதமராக நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும்.
இந்தத் தேர்தல் அவருக்கு பொதுமக்களிடம் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது. ஐந்தாண்டு காலத்தில் அவர் எப்போது வேண்டுமானாலும் பதவி ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால சிபிபி கட்சித் தலைவராக அவரது தந்தை இருப்பார்.
அமெரிக்காவின் வெஸ்ட் பாயிண்ட் ராணுவ அகடாமியின் பட்டம் பெற்ற ஹுன் மானெட், கம்போடியாவின் ஆயுதப் படைகளின் முக்கிய தலைவர். வேகமாக வளர்ச்சிகண்ட அவர், பயங்கரவாத எதிர்ப்புத் தலைவராகவும், தனது தந்தையின் மெய்க்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவராகவும், ராணுவத் தளபதியாகவும், துணை ராணுவத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பொருளியலில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் ஹுன் மானெட், முறையான கல்வி இல்லாத தந்தைக்கு முற்றிலும் மாறாக, உயர் கல்வி கற்றவர்.
தனது தந்தையைப் போலவே ஃபேஸ்புக், டெலிகிராமில் அடிக்கடி பதிவிட்ட போதிலும் அரிதாகவே பேட்டிகள் அளித்துள்ளார். அனைத்துலக அளவில் அவர் குறித்து பெரியளவில் அறிமுகம் இல்லை.
ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பின் போது கருத்துக்கேட்ட ஊடகங்களிடம் “மன்னிக்கவும். நான் வாக்களிக்க வந்துள்ளேன், அறிக்கை வெளியிட அல்ல. சொல்வதற்கு எந்தக் கருத்தும் இல்லை,” என்று ஒரே வரியில் முடித்துவிட்டார்.
கம்போடியாவுக்கும் அதன் 16 மில்லியன் மக்களுக்கும் ஹூன் மானேட் என்ன இலக்கு வைத்துள்ளார் என்பது பற்றித் தெரியவில்லை.
ஹுன் மானெட்டின் பிரிட்டிஷ், அமெரிக்க கல்வி, ஜனநாயக அனுபவம் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்பதையும், மேற்கு நாடுகளுடன் கம்போடியாவின் உறவை மேம்படுத்துமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

