அமைதியான தேர்தல்; ஆசியான் தலைமைச் செயலாளர் பாராட்டு

2 mins read
68ac9759-b291-4998-b4d2-8285df043f54
கம்போடியாவில் வாக்களிப்பும் வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடைபெற்றது. - படம்: ஏஎஃப்பி

நோம்பென்: சுமுகமாக தேர்தலை நடத்தி முடித்தற்கு கம்போடியத் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆசியானின் தலைமைச் செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹார்ன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கம்போடியாவின் அழைப்பின் பேரில் தேசிய தேர்தல் குழு ஏற்பாடு செய்த தேர்தல் கண்காணிப்பு பணியில் அவர் பங்கேற்றார்.

தேர்தல் அமைதியாகவும் ஒழுங்குடனும் வன்முறைகளின்றி நடைபெற்றதாகக் கூறிய அவர், நவீன கம்போடியாவில் தொடரும் ஜனநாயக மாற்றங்களைக் காண வாய்ப்புக் கிடைத்தற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

தேர்தலின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன், இந்த ஆண்டு பொதுத் தேர்தலைக் கண்காணிக்க கம்போடியாவால் அழைக்கப்பட்ட 65 நாடுகள், அனைத்துலக அமைப்புகளில் ஆசியான் செயலகமும் ஒன்று.

ஐக்கிய நாடுகள் சபையின் நிதி ஆதரவுடன் 1993ல் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஏழாவது தேர்தல் இது. இத்தேர்தலில் 17 கட்சிகள் போட்டியிட்டன. எனினும் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இது ஒருதலைப்பட்சமான தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.

தேர்தலில் 8.1 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக முன்னோட்டச் செய்திகள் கூறின. 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்றாலும், எதிர்பார்த்ததுபோல் 125 நாடாளுமன்ற இடங்களையும் ஆளும் கட்சியால் கைப்பற்ற முடியவில்லை.

எனினும், இது தேர்தல் என்பதைவிட முடிசூட்டு விழாவாகவே எதிர்க்கட்சியினரால் கருதப்படுகிறது.

“ஹுன் குடும்பத்தின் ஆட்சி தொடர, கம்போடியாவின் அடுத்த பிரதமராக தனது கட்சி தனது மகனைத் தேர்ந்தெடுக்கும் என்பதை ஹுன் சென் உறுதிசெய்த நிகழ்வு அது. அதை ‘தேர்வு’ என்றே அழைக்க வேண்டும்,” என்று 2017ல் தடை செய்யப்பட்ட மற்றொரு எதிர்க்கட்சியான சிஎன்ஆர்பியின் நாடுகடத்தப்பட்ட முன்னாள் அமைச்சரும் உறுப்பினருமான மூ சோசுவா பிபிசியிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளைத் தடைசெய்த இத்தேர்தலைக் கண்டிக்கும்விதமாக தடைகளை விதிக்கவும் உதவிகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஆளும் கம்போடிய மக்கள் கட்சி 125 நாடாளுமன்றத் தொகுதிகளில் 120 இடங்களை வென்றுள்ளது. இத்தேர்தல் சுதந்திரமானதோ, நியாயமானதோ அல்ல என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.

கம்போடிய அதிகாரிகள் அரசியல் எதிர்ப்பு, ஊடகம், சிவில் சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக மில்லர் கூறினார்.

“இந்த நடவடிக்கைகள் கம்போடிய மக்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான குரலையும் தேர்தல் மறுதலித்துள்ளது,” என்றார் அவர்.

“இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சில வெளிநாட்டு உதவித் திட்டங்களை இடைநிறுத்தம் செய்வதுடன், ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் தனிநபர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது,” என்றார் திரு மில்லர். எனினும், கூடுதல் விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்