சுரங்கத்தில் பெருவெள்ளம்;தென்கொரிய அரசு விசாரணை

2 mins read
a25100cd-c121-4fb5-85f2-f60b878481ca
கனமழையின்போது சுரங்கத்தில் மூழ்கிய பேருந்து. இந்தச் சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: சியோங்ஜு மத்திய நகரத்தில் உள்ள சுரங்கத்தில் எப்படி பெருவெள்ளம் ஏற்பட்டது என்பது குறித்து அரசாங்கம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஐந்து வட்டார காவல்துறை, அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.

காவல் நிலையம், தீயணைப்பு சேவைகளின் தலைமையகம், வட்டார அரசாங்க அலுவலகம் மற்றும் நகர அரசாங்க அலுவலகம், மாநில கட்டுமான நிறுவனம் ஆகியவற்றுக்கு சியோங்ஜு மாவட்ட தலைமைச் சட்ட அலுவலகம் விசாரணையாளர்களை அனுப்பி ஆதாரங்களைச் சேகரித்தது.

சுரங்கத்தில் வெள்ளம் ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க வட்டார காவல் நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டது என்று தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஜூலை நடுப்பகுதியில் கனமழை பெய்தபோது மேற்கு சியோங்ஜுவில் உள்ள ஓசோங் சுரங்கப் பாதையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஒரு பேருந்து சிக்கிக் கொண்டது. இந்த வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துப் பேர் காயம் அடைந்தனர்.

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவத்துக்குக் காரணங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

மாவட்ட காவல்துறையினர், அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தங்களுடைய கவனக் குறைவை மறைக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் சோதனைகளுக்கு பொறுப்பான அரசாங்க கொள்கை ஒருங்கிணைப்பு அலுவலகம், வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் நிலைமையை மிக மோசமாகக் கையாண்டதாகக் கூறி, குறிப்பிட்ட ஆறு காவல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சுரங்கப்பாதை தொடர்பான ஆபத்தான சூழ்நிலைகள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வட்டார அரசாங்க அலுவலகமும் தீயணைப்புத் துறையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென் கொரியாவில் திங்கட்கிழமை வரை பெரும்பாலான பகுதிகளில் பருவமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்