தோக்கியோ: ஜப்பானின் ஹொக்கய்டோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தலையில்லா உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர், அவரது மனைவி, மகள் ஆகியோர் ஜூலை முற்பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை அவர்களுடைய வீட்டில் மனிதத் தலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று விசாரணை வட்டாரங்களைச் சுட்டிக்காட்டி மெய்னிசி ஷிம்புன் நாளேடு தெரிவித்தது.
ருனா டமுரா, 29, அவரது தந்தை 59 வயது மருத்துவர் ஒசாமு டமுரா ஆகியோர் திங்கட்கிழமை அன்று சடலத்தை சிதைத்தல், உடைமை மற்றும் சடலத்தை அப்புறப்படுத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
மறுநாள் செவ்வாய்க் கிழமை ருனாவின் 60 வயதான தாயார் ஹிரோகோவும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 2 அன்று சப்போரோவில் உள்ள சுசுகினோ மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையின் குளியலறையில் 62 வயதான ஹிட்டோஷி உராவின் தலையில்லாத உடல் நிர்வாணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
ருனாவும் ஒசாமுவும் ஹோட்டலில் அவரது தலையைத் துண்டித்திருக்கலாம் என்றும் கொல்லப்பட்டவரின் தலையை வேறு இடத்திற்கு அவர்கள் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கத்தியால் குத்தப்பட்டதால் ஹோட்டலில் இருந்த நபர் இறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு தலை துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று விசாரணை ஆதாரங்களை மேற்கோள்காட்டி தி ஆசாஹி ஷிம்புன் குறிப்பிட்டது.
ஆனால் ஹோட்டல் அறையில் போராட்டம் நடைபெற்றதற்கான அறிகுறி எதுவும் இல்லை. இறந்த நபர் தன்னைத் தற்காத்துக் கொண்டதற்கான அடையாளங்களும் காணப்படவில்லை என்று விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கொலைக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. தந்தை-மகளுக்கும் உயிரிழந்த திரு உராவுக்கும் இடையிலான உறவை காவல்துறை தீர்மானிக்க முயற்சி செய்கிறது என்று கியோடோ நியூஸ் கூறியது,
சந்தேக நபர்கள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்களா என்பதும் தெரியவில்லை.
ஜூலை 1 ஆம் தேதி, திரு உரா மற்றும் ருனா என்று நம்பப்படும் மற்றொரு நபரும் இரவு 10.50 மணியளவில் ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். ஜூலை 2 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒருவர் மட்டும் தனியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளார்.
திரு ஒசாமு, சப்போரோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
அவர் ருனாவை ஹோட்டலில் இறக்கிவிட்டு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஹோட்டல் ஊழியர் ஒருவர், அறையை சுத்தம் செய்தபோது தலையில்லா உடலைக் கண்டுபிடித்துள்ளார்.