சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் கடந்த ஆண்டு ‘ஹாலோவீன்’ திருவிழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவத்தின் தொடர்பில் அரசாங்கத்தின் அரைகுறையான பதில் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்க நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு எதிராக நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களை இது சினமடையச் செய்துள்ளது. தீர்ப்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள் சிலர் மனமுடைந்துபோய் கண்ணீர்விட்டு அழுதனர். அவர்களில் தாய்மார்கள் இருவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அமைச்சர் லீ சாங் மின்னை பதவியிலிருந்து நீக்கக் கோரி கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். சோல் நகரில் உள்ள பிரபல இரவுநேர கேளிக்கை பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 159 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்விக்காக பொறுப்பேற்கும்படி அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
“இந்த அவலமான சம்பவம் ஒரேயொரு காரணத்தாலோ நபராலோ ஏற்படவில்லை,” என்று குறிப்பிட்ட நீதிபதி லீ ஜோங் சியோக், பெரிய அளவிலான பேரிடர்களுக்கு ஒன்றுபட்ட முறையில் பதில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆற்றலைப் பல்வேறு அரசாங்க அமைப்புகள் கொண்டிருக்கவில்லை என்றார்.
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பேசிய திரு லீ, பேரிடரை அரசியலாக்குவதை நிறுத்திவிட்டு ஒன்றுபடுவதற்கான நேரம் இது என்று கூறினார்.
நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டிருந்த உறவினர்களும் ஆதரவாளர்களும், “லீ சாங் மின்னுக்கு தடைக் காப்பு வழங்கிய அரசியலமைப்பு நீதிமன்றத்துக்குக் கண்டனம்,” என்று கூச்சலிட்டனர்.


