மியன்மாரில் வீட்டுக்காவலில் சூச்சி அம்மையார்: ஊடகத் தகவல்

மியன்மாரில் வீட்டுக்காவலில் சூச்சி அம்மையார்: ஊடகத் தகவல்

3 mins read
441fd0dd-cb86-4492-be56-628cc801b572
சூச்சி அம்மையாரையும் மற்றவர்களையும் ராணுவ அரசாங்கம் கையாளும் முறை சரியில்லை என்று மேற்கத்திய அரசாங்கங்கள் கண்டித்து இருக்கின்றன. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவை கோரிவருகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

யங்கூன்: மியன்மாரில் சிறையில் இருக்கும் ஆங் சான் சூச்சி அம்மையார் வீட்டுக்காவலில் வைக்கப்படலாம் என்று இரண்டு ஊடகத் தளங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

பதவியில் இருந்து அகற்றப்பட்ட அந்த அம்மையாரை தலைநகர் நேபிதாவ்வில் வீட்டுக் காவலில் வைக்க ராணுவ அரசாங்கம் முடிவு செய்திருக்கக் கூடும் என்று அவை குறிப்பிட்டு உள்ளன. சூச்சி அம்மையாருக்கு வயது 78.

சூச்சி அம்மையார் 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று ஆட்சிபுரிந்து வந்தார். ஆனால் திடீரென்று ராணுவப் புரட்சி ஏற்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அம்மையார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த முயற்சியின்போது ஆயிரக் கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அல்லது கொல்லப்பட்டனர். மியன்மாரில் அடுத்த வாரம் சமயக் கொண்டாட்டம் நடக்க இருக்கிறது.

அதையொட்டி சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அம்மையார் வீட்டுக் காவலுக்கு மாற்றப்படலாம் என்று தன்னை அடையாளம் கூறாத பாதுகாப்புத்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசிடேட்ஸ் பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

இதனிடையே, சூச்சி அம்மையார் ஏற்கெனவே ஒரு வீட்டுக்கு இடமாற்றப்பட்டு இருக்கக் கூடும் என்று சிறைக்கு அணுக்கமான தகவல் வட்டாரம் கூறியதாக பிபிசி பர்மிய மொழிச் சேவை தெரிவித்தது. அந்த வீடு பொதுவாக அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்தும் இருப்பிடம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருவாட்டி சூச்சி அம்மையார் எங்கே இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இது பற்றி மியன்மார் ஆளும் ராணுவத் தரப்பிடம் இருந்து எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

திருவாட்டி சூச்சி அம்மையாரின் வழக்கறிஞர்களும் தேசிய ஐக்கிய அரசாங்கம் என்ற அம்மையாரின் நிழல் அரசாங்கப் பேச்சாளரும் உறுதியாக எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

மியன்மாரில் நிலவரம் கொஞ்சம் மேம்படுவதாகத் தெரிகிறது. ஆனால், அம்மையார் இன்னமும் கைதியாகத் தான் இருக்கிறார். அந்த நிலையில் மாற்றம் இல்லை என்று தேசிய ஐக்கிய அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

சூச்சி அம்மையாரின் வாழ்க்கை 33 ஆண்டுகளாக சிறையில்தான் கழிகிறது. தேர்தல் தில்லுமுல்லு, மக்களைத் தூண்டிவிட்டது, ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அவர் எதிர் நோக்குகிறார். அவற்றை அவர் மறுத்து வருகிறார்.

அம்மையாரையும் மற்றவர்களையும் ராணுவ அரசாங்கம் கையாளும் முறை சரியில்லை என்று மேற்கத்திய அரசாங்கங்கள் கண்டித்து இருக்கின்றன. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவை கோரிவருகின்றன.

இதனிடையே, அண்மையில் தான் சூச்சி அம்மையாரைச் சந்தித்ததாக தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் டோன் பிரமுத்வினாய், இந்த மாதம் தெரிவித்து இருந்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியான் அமைப்பு, தங்கள் அமைப்பில் இடம்பெற்றுள்ள மியன்மாரில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி என்பதன் தொடர்பிலான அணுகுமுறை தொடர்பில் இணக்கம் காண முயன்றுவரும் நிலையில் அந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்பு, மியன்மாரில் நடந்த வந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து கலவரம் வெடித்தது. அதையடுத்து 1989ல் சூச்சி அம்மையார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மியன்மார் சுதந்திரப் போராட்டத் தலைவரின் மகளான அவர், ஜனநாயத்திற்காக நடத்திவரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 1991ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ராணவ சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அம்மையார் வென்றார். ஆனால் 2021ல் ராணுவப் புரட்சி மூலம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்