புதல்வரிடம் பொறுப்பை ஒப்படைத்து கம்போடிய பிரதமர் விலகுகிறார்

2 mins read
4cd8e505-7d7c-4344-8c1a-5491cec415c8
கம்போடியாவை சுமார் 40 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்து வரும் பிரதமர் ஹுன் சென், நாட்டின் நிர்வாகத்தை தன்னுடைய மூத்த புதல்வரிடம் ஒப்படைத்துவிட்டு பதவி விலகப்போவதாக அறிவித்து இருக்கிறார்.   - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

நோம்பென்: கம்போடியாவின் பிரதமர் ஹுன் சென் பதவி விலகுகிறார். அவர் அதிகார பொறுப்பை தன்னுடைய மூத்த புதல்வரிடம் ஆகஸ்ட் மாதம் ஒப்படைக்கிறார்.

இந்த விவரங்களை கம்போடிய பிரதமரே புதன்கிழமை அறிவித்தார்.

உலகிலேயே ஆக அதிக காலம் பிரதமர் பொறுப்பில் இருந்து வரும் திரு ஹுன் சென், ஏறக்குறைய 40 ஆண்டு காலமாக கம்போடியாவை ஆண்டு வருகிறார்.

‘‘நாட்டின் பிரதமராக நான் தொடரப்போவதில்லை என்பதை இப்போது மக்களுக்கு அறிவிக்கிறேன். மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்,’’ என்று திரு ஹுன் சென் அரசாங்க தொலைக்காட்சியில் இடம்பெற்ற சிறப்பு ஒளிப்பதிவில் அறிவித்தார்.

தன்னுடைய மூத்த புதல்வரான ஹுன் மானட் புதிய அரசாங்கத்துக்குத் தலைமை ஏற்பார் என்றும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.

திரு ஹுன் சென் ஆளும் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து சேவையாற்றி வருவார். தேசிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் அவர் இருந்து வருவார்.

திரு ஹுன் சென், தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை 38 ஆண்டு காலம் ஆட்சி புரிந்து வருகிறார்

கம்போடியாவின் மன்னர் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரு ஹுன் சென்னின் புதல்வரைப் பிரதமர் பதவியில் நியமிப்பார்.

நாடாளுமன்றம், அதை ஆகஸ்ட் 22ஆம் தேதி வாக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்தும்.

‘‘பிரதமர் பதவியில் தொடர்ந்து நானே இருந்து வந்தால் கம்போடியாவின் சூழ்நிலை நிலையில்லாமல் போய்விடும். இளையர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது,’’ என்று திரு ஹுன் சென் குறிப்பிட்டார்.

கம்போடியாவில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த தேர்தலில் திரு ஹுன் சென் கட்சி இமாலய வெற்றி பெற்றது.

அந்தத் தேர்தலில் அவருடைய கட்சியை எதிர்த்து போட்டிபோட யாரும் இல்லை.

திரு ஹுன் சென்னின் புதல்வர் ஹுன் மானட் மேற்கத்திய கல்வி பயின்றவர். அவர், ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தலைநகர் நோம் பென்னை பிரதிநிதிக்கும் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதுவரையில் கம்போடியாவுக்கான தேசிய இலக்கு எதையும் வருங்காலப் பிரதமர் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

கம்போடியாவின் தேர்தலை பலரும் குறைகூறி உள்ளனர். அது ஓர் அவமானம் என்று அவர்கள் வர்ணித்து இருக்கிறார்கள்.

நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியைத் தேர்தலில் போட்டிபோட முடியாத அளவுக்கு அரசாங்கம் முடக்கிவிட்டது. யாராவது தேர்தலை புறக்கணித்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் அரசாங்கம் மிரட்டி இருந்தது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 21ஆம் தேதி கூடும். புதிய அமைச்சரவை ஆகஸ்ட் 22ஆம் தேதி பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்