தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ; ஒருவர் உயிரிழப்பு

2 mins read
கப்பல் ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் எனத் தகவல்
5575c0a6-4f9a-45b3-871f-cacd8de25e50
மீட்புக் கப்பலில் இருந்தவர்கள், தீப்பற்றிக்கொண்ட கப்பல்மீது நீரைப் பீய்ச்சி அடித்தனர். - படம்: இபிஏ

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தின் கரையோரப் பகுதியில் புதன்கிழமை கிட்டத்தட்ட 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பல் திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமுற்றனர்.

பனாமாவில் பதிவுசெய்யப்பட்ட அந்த 199 மீட்டர் நீளமுடைய கப்பல், ஜெர்மனியிலிருந்து எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு தீ மூண்டது. தீயிலிருந்து தப்பிக்க கப்பல் ஊழியர்கள் பலர் கப்பலில் இருந்து கடலில் குதித்தனர்.

கப்பல் ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் என நெதர்லாந்து செய்தி நிறுவனமான என்ஓஎஸ் குறிப்பிட்டது.

மீட்புக் கப்பலில் இருந்தவர்கள், தீப்பற்றிக்கொண்ட கப்பல்மீது நீரைப் பீய்ச்சி அடித்தனர். எனினும், அதிகப்படியான நீரைப் பீய்ச்சி அடித்தால் கப்பல் மூழ்கும் அபாயம் நிலவியதாக நெதர்லாந்து கடலோரப் படை தெரிவித்தது.

தீ சில நாள்களுக்கு நீடிக்கக்கூடும் என்று கடலோரப் படையை மேற்கோள்காட்டி நெதர்லாந்து செய்தி நிறுவனமான ஏஎன்பி தெரிவித்தது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என கடலோரப் படை அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டது. என்றாலும், கப்பலில் இருந்த மின்சார கார் ஒன்றுக்கு அருகே தீ மூண்டதாக கடலோரப் படை பேச்சாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். கப்பலில் இருந்த 2,857 வாகனங்களில் 25 வாகனங்கள் மின்சார வாகனங்களாகும்.

கப்பலில் இருந்த வாகனங்களில் ஏறக்குறைய 350 வாகனங்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

கப்பல் ஊழியர்கள் எழுவர் கடலில் குதிக்க வேண்டிய நிலைக்கு தீ மளமளவென பரவிவிட்டதாக அரச நெதர்லாந்து மீட்பு நிறுவனத்தைச் சேர்ந்த திரு வில்லர்ட் மோல்நார் தெரிவித்தார்.

கடலில் குதித்தவர்களில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் திரு மோல்நார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்