அங்காரா: சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் வாங் யி, துருக்கிக்கு முதல் பயணம் மேற்கொண்டு உக்ரேன் விவகாரம் குறித்து துருக்கி வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தி துருக்கி அதிபர் தய்யூப் எர்டோகனையும் சந்தித்துள்ளார்.
சீனாவின் அனுபவமிக்க தூதரான வாங் யி அந்நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். வளர்ந்துவரும் நட்சத்திரமாகக் கருதப்பட்ட சின் காங்குக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு அமைச்சராக பொறுப்பு ஏற்று ஆறு மாதங்களே ஆன நிலையில் சின் காங் ஒரு மாத விடுப்பில் சென்றுள்ளார்.
துருக்கியில் திரு வாங் யியும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹேகன் ஃபிடனும் உக்ரேனின் அண்மை நிலவரம், உலகளாவிய நிதி நிலைமை உள்ளிட்டவற்றை குறித்து விவாதித்தனர் என்று துருக்கிய அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டில் ஐநா, துருக்கி முயற்சியில் உருவான தானிய ஒப்பந்தத்திலிருந்து அண்மையில் ரஷ்யா விலகிவிட்டது. இந்த ஒப்பந்தம்தான் உக்ரேன் பாதுகாப்பாக தானிய ஏற்றுமதி செய்ய வழிவகுத்தது. ரஷ்யா மீறியதால் தானிய ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
அதன் பிறகு உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உக்ரேன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதால் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அனைத்து நாடுகளின் இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும் என்று 12 அம்ச அமைதித் திட்டத்தை சீனா வெளியிட்டுள்ளது.
திரு வாங் யி உடனான தனது பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளும் உலகளாவிய மற்றும் வட்டாரப் பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிப்பதால் துருக்கியும் சீனாவும் தங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் என்று திரு எர்டோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
துருக்கிக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளியல் மற்றும் வர்த்தக உறவுகளின் வளர்ச்சி குறித்தும் திரு ஃபிடனும், திரு வாங் யியும் பேசியதாக துருக்கிய வெளியுறவு அமைச்சின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

