100 ரிங்கிட் பற்றுத் திட்டம்: 10 மில்லியன் மலேசியர்களுக்கு உதவும்

2 mins read
65ac8371-505a-46cc-906a-a32c74e2afff
100 ரிங்கிட் பற்றுத் திட்டம் மூலம் 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பலனடைவார்கள் என்று மதிப்பிடப்படுவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஆண்டுக்கு 100,000 ரிங்கிட் அளவுக்குச் சம்பாதிக்காத பெரியவர்களுக்கு 100 ரிங்கிட் வழங்கப்படும்.

இந்தத் தொகை அவர்களின் மின்பணப் பையில் வரவு வைக்கப்படும். இதை அவர்கள் தங்கள் கைப்பேசிச் செயலி வழியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நோக்கத்திற்காக 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இதன் மூலம் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைவார்கள் என்று கணக்கிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

கோலாலம்பூரில் மலேசியப் பங்குபத்திர ஆணையத்தின் தலைமையகத்தில் வியாழக்கிழமை பிரதமர் இதனை அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் மதானி பொருளியல்: மக்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ஏற்பாட்டை தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றினார்.

இந்த 100 ரிங்கிட் உதவித் திட்டம் பற்றிய மேல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இபிஆர் (eBR) என்ற செயல்திட்டம் வெற்றிகரமான முறையில் இடம்பெற்று இருக்கிறது. அது இரண்டு மில்லியன் இளையர்களுக்குப் பலன் அளித்ததோடு மட்டுமன்றி, தொழில்துறைக்கும் உதவி இருக்கிறது.

அந்தத் திட்டத்தின்கீழ் ரொக்க புழக்கமற்ற சமுதாயம் உருவாக உதவி கிடைத்து இருக்கிறது. அந்த மின் பணப்பையில் பணம் போடும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்க அமைப்புகள் பெரியவர்களுக்கு 100 ரிங்கிட் தொகையை அவர்களின் செயலிகளில் வரவு வைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தரம் 56க்கும் குறைந்த அரசாங்கச் சேவையாளர்களுக்கு 300 ரிங்கிட் நல்வாழ்வு பாராட்டு உதவித்தொகையும் சிறப்பு தொகையாக வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு இந்தத் தொகை 200 ரிங்கிட்டாக இருக்கும்.

இந்தச் சிறப்பு உதவித் திட்டம் மூலம் 1.3 மில்லியன் அரசாங்கச் சேவையாளர்கள் பயனடைவார்கள்.

பதவி ஓய்வு பெற்றவர்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு உதவி கிடைக்கும்.

மதானி பொருளியல் ஏற்பாட்டின் மூலம் அரசாங்கம், அரசாங்கம் சாரா அமைப்புகள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் மலேசியர்களுக்கும் பொருளியல் ரீதியில் ஆதிக்கம் இருக்கும்.

இப்போது முதல் அனைத்து அமைச்சுகளும் மதானி பொருளியலை பலப்படுத்துவதற்கான குறிப்பிட்ட திட்டங்களை அறிவிக்கும் என்று தெரிவித்த பிரதமர், நாட்டின் நிதி ஆற்றலைப் பலப்படுத்துவதே தமது முக்கிய முன்னுரிமை என்று குறிப்பிட்டார்.

‘‘மலேசியாவின் இப்போதைய கடன் நிலைமை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சீர்திருத்தம் இடம்பெறவில்லை என்றால் படுமோசமான நெருக்கடியை நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும்,’’ என்று திரு அன்வார் எச்சரித்தார்.

‘‘நடைமுறைச் செலவுகளை ஈடுசெய்ய வரி வருமானம் மட்டும் போதாது. மேம்பாடுகளின் பேரில் செலவிடக் கடன்களை வாங்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்படுகிறது,’’ என்று அவர் குறிப்பிட்டார்.

‘‘பொருளியல் சீரமைப்புகள் தேவைப்படும் போதிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து இருப்பதன் காரணமாக சவால்களை எதிர்நோக்கும் மலேசியர்களின் நல்வாழ்வை அரசாங்கம் ஒருபோதும் அலட்சியப்படுத்தாது.

உதவி தேவைப்படுவோருக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவும்,’’ என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்