ஒட்டாவா: கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வாக்காளர்களிடையில் அவருக்குள்ள ஆதரவைப் பாதித்துவரும் வாழ்க்கைச் செலவின உயர்வு, வீடுகளின் பற்றாக்குறை போன்ற பொருளியல் விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் புதன்கிழமை அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்தார்.
2025 இரண்டாம் காலாண்டுக்குள் நடத்தப்படவேண்டிய தேர்தலுக்குமுன் செய்யப்படும் கடைசி அமைச்சரவை மாற்றமாக இது இருக்கலாம்.
2015 முதல் பிரதமராகப் பதவி வகிக்கும் ட்ரூடோ, அமைச்சரவைக்குள் ஏழு புதியவர்களைக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலாண்ட், புத்தாக்க அமைச்சர் ஃபிராங்கோ-பிலிப் செம்பேன், வெளியுறவு அமைச்சர் மெலனி ஜாலி போன்ற முக்கியமானவர்களைத் தக்கவைத்துக் கொண்டார்.
அமைச்சரவை பொறுப்புகளில் முக்கால்பகுதியைப் பிரதமர் மாற்றியிருக்கிறார். புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்பு, உள்கட்டமைப்பு, சமூக அமைச்சுக்கு முன்னாள் குடிநுழைவு அமைச்சர் பொறுப்பேற்கிறார்.
வீடுகளின் பற்றாக்குறைக்கும் பணவீக்க அதிகரிப்புக்கும் திரு ட்ரூடோ மீது பழிசுமத்தும் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, ஓராண்டுக்கும் மேலாகக் கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் நீடித்து வருகிறது.
திரு ட்ரூடோவின் லிபரல் கட்சியைவிட கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பொதுமக்களிடையில் 38 விழுக்காடு முதல் 28 விழுக்காடு வரை ஆதரவு இருப்பதாகப் புதன்கிழமை வெளியிடப்பட்ட அபகஸ் ஆய்வு காட்டுகிறது.
இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு ட்ரூடோ, “புதிய உறுப்பினர்களுடன் புதிய சக்தியையும் புதிய சவால்களையும் கொண்டு வருவது நமது பொருளியல் குழுவுக்கு முக்கியம்,” என்று கூறினார்.
“நாம் பெரும் பொருளியல் சவால்களை எதிர்நோக்குகிறோம் – குடியிருப்பு, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, வட்டி விகிதங்கள்.”
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அமைச்சரவை மாற்றங்கள் பிரதமரின் தோல்விக்கு ஆதாரம் என்று கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவர் கூறியிருக்கிறார்.

