ரோட்ஸ், கிரீஸ்: கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவில் தொடர்ந்து ஏழாம் நாளாகப் பரவிவரும் காட்டுத் தீயால், செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணிகள் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர்.
ஒரு வாரத்திற்குமுன் பரவத் தொடங்கிய காட்டுத் தீ, கடந்த வார இறுதியில் தீவின் கடலோரச் சுற்றுலாத்தளங்களை எட்டியதால், சுமார் 20,000 பேர் வீடுகளிலிருந்தும் ஹோட்டல்களிலிருந்தும் வெளியேறினர்.
திங்கட்கிழமை ஈராயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகள் விமானம்வழி வீடு திரும்பினர். செவ்வாய்க்கிழமை மேலும் பலர் திரும்பிச்செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணங்களைச் சுற்றுலா நிறுவனங்கள் ரத்து செய்தன.
கிரீஸில் கோடைக்கால வெயிலால் காட்டுத் தீ அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஆனால், பருவநிலை மாற்றத்தால் தென் ஐரோப்பா முழுவதிலும் கடுமையான அனல்காற்று அதிகரித்திருக்கிறது. புதன்கிழமை வரை வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், சில பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் இருக்கும் என்றும் முன்னுரைக்கப்படுகிறது.
ரோட்ஸ் தீவு காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த துருக்கி, சுலோவாக்கியா தீயணைப்புப் படையினரும் உதவி செய்கின்றனர்.
கிரீஸ் தலைநகர் ஏதன்ஸ் அருகே ஈவியா தீவிலும் கோர்ஃபு தீவிலும் காட்டுத் தீ எரிகிறது.
ராய்ட்டர்ஸ்

