யங்கூன்: 2021ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட மியன்மார் ஜனநாயக அரசாங்கத்தின் தலைவியான ஆங் சான் சூச்சி திடீர் மாற்றமாக அரசாங்கக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டார் என்று அவரது கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
திங்கட்கிழமை அன்று உயர்மட்ட வளாகத்திற்கு சூச்சி மாற்றப்பட்டார் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத தேசிய ஜனநாயக லீக் கட்சியின் பிரமுகர் குறிப்பிட்டார்.
2021 பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நேப்பிடாவ் தலைநகரில் உள்ள நீதிமன்றத்தில் சூச்சி ஒரே ஒரு முறை காணப்பட்டார்.
அதன் பிறகு அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.
ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்ததும் தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கலவரம் வெடித்தது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வெவ்வேறு இடங்களில் குடியேறினர்.
திருவாட்டி சூச்சி, நாட்டின் கீழவை சபாநாயகர் டி குன் மியாட்டைச் சந்தித்ததாகவும் மியன்மாருக்கு வருகையளிக்கும் ஆசியான் விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் டெங் ஸிஜுவானை சந்திக்கலாம் என்றும் கட்சியின் பிரமுகர் மேலும் தெரிவித்தார்.
மற்றொரு கட்சியின் வட்டாரமும் நேப்பிடாவில் உள்ள முக்கிய விருந்தினர் வளாகத்துக்கு சூச்சி மாற்றப்பட்டதை உறுதி செய்தது.
நோபல் பரிசு பெற்ற 78 வயதான சூச்சியின் உடல்நிலை குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. அவர் காவலில் வைக்கப்பட்டதிலிருந்து ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்காக தினமும் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஊழல், சட்டவிரோதமாக பேசும் கருவிகளை(வாக்கி-டாக்கி) வைத்திருந்தது, கொரோனா கிருமித்தொற்று கட்டுப்பாடுகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக திருவாட்டி சூச்சிக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது, சூச்சிக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி என மனித உரிமை அமைப்புகள் ராணுவ அரசாங்கத்தைச் சாடியுள்ளன.

