அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா: ஆகஸ்டில் முத்தரப்புச் சந்திப்பு

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா: ஆகஸ்டில் முத்தரப்புச் சந்திப்பு

1 mins read
6cfd37df-f45f-43b0-845a-a3be956a06df
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (இடது), ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (நடுவில்), தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மூவரும் ஹிரோஷிமாவில் மே 21ஆம் தேதி நடைபெற்ற ஜி7 உச்ச நிலை மாநாட்டின்போது சந்தித்துப் பேசினர். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்டு 18ஆம் தேதி மேரிலேண்டில் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் இருவருடனும் முத்தரப்புச் சந்திப்பை ஏற்றுநடத்தவிருக்கிறார்.

வெள்ளை மாளிகை அந்தத் தகவலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இந்தோ-பசிபிக் வட்டாரத்திலும் அதற்கு அப்பாலும் முத்தரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் மூன்று தலைவர்களும் கலந்துபேசுவர்.

வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தல் குறித்தும் ஆசியானுடனும் பசிபிக் தீவுகளுடனும் உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் அவர்கள் கலந்துரையாடுவர் என்று கூறப்பட்டது.

ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது குறித்தும் வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்கள் குறித்தும் கவலை நிலவும் வேளையில் முக்கிய நட்பு நாடுகளான ஜப்பானுடனும் தென்கொரியாவுடனும் அணுக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்த வாஷிங்டன் எண்ணம் கொண்டுள்ளது.

ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் வரலாற்றுரீதியான சர்ச்சைகள் நிலவுவதால் அவற்றின் இருதரப்பு உறவுகள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இரு நாடுகளும் தற்போது அதைச் சரிசெய்வதில் முனைந்துள்ளன.

முத்தரப்புச் சந்திப்பில் உலகளாவிய, வட்டாரச் சவால்கள் குறித்த கண்ணோட்டத்தை மூன்று தலைவர்களும் பகிர்ந்துகொள்வர் என்று கருதப்படுகிறது. விதிகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறையை ஊக்குவிப்பது, பொருளியல் வளப்பத்தை வலுப்படுத்துவது போன்ற அம்சங்கள் தொடர்பிலும் அவர்கள் கலந்துபேசுவர் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்