போனஸ் ஏரிஸ்: அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஃபெர்னான்டோ பெரஸ் அல்காபா என்ற மின்னிலக்க நாணய கோடீஸ்வரரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.
தலைநகர் போனஸ் ஏரிஸ் நகரில் நீரோடை ஒன்றில் அந்தப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.
அந்தச் சிறப்பு நிற பெட்டியைப் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சென்ற வார முடிவில் தற்செயலாகக் கண்டனர். அந்தச் சிறுவர்களின் பெற்றோர் அது பற்றி காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.
கோடீஸ்வரரின் கால்களும் முழங்கையும் பெட்டிக்குள் இருந்தன. பிறகு கை, கால்கள் முழுமையாக நீரோடையில் இருந்து மீட்கப்பட்டன.
உடலில் பச்சை குத்தப்பட்டிருந்த அடையாளத்தைக் கொண்டும் கைரேகைகளைக் கொண்டும் அந்த உடலுக்குச் சொந்தக்காரர் யார் என்பது தெரியவந்தது.
பிறகு பிரேதப் பரிசோதனை நடந்தது. திரு அல்காபா சுட்டுக் கொல்லப்பட்டு பிறகு அவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது என்பது தெரியவந்தது.
அந்தக் கோடீஸ்வரருக்கு வயது 40 இருக்கலாம். அவர் ஸ்பெயின் நாட்டில் வசித்து வந்தார். அர்ஜெண்டினாவுக்கு வந்திருந்தபோது அவருக்கு இந்தக் கதி ஏற்பட்டுவிட்டது.
திரு அல்காபாவின் தலையும் முண்டமும் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக எல் பாய்ஸ் என்ற ஸ்பானிய மொழி செய்தித்தாள் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடன் பிரச்சினை தொடர்பில் அந்தக் கோடீஸ்வரர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
திரு அல்காபாவின் ஆடம்பர வாழ்க்கையைச் சித்திரிக்கும் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தை 900,000க்கும் மேற்பட்ட மக்கள் பின்தொடர்கிறார்கள்.
அவர் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி பெரும் பணக்காரராக ஆனார் என்று கூறப்படுகிறது.
அவர், முதலில் ரொட்டிகளை விற்று வந்தார். பிறகு பழைய வாகனங்களை வாங்கி அவற்றை பழுதுபார்த்து விற்று சம்பாதித்து வந்தார்.
பிறகு திரு அல்காபா மின்னிலக்க நாணய முதலீடுகளில் ஈடுபட்டு பெரும் செல்வந்தர் ஆனார் என்று கூறப்படுகிறது.

