சிட்னி: போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையின் ஹெலிகாப்டர் ஒன்று சனிக்கிழமை குவீன்ஸ்லாந்து மாநிலக் கடற்கரைக்கு அருகே கடலில் விழுந்து நொறுங்கியது.
அதையடுத்து, ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் மேற்கொண்ட ‘தாலிஸ்மன் சேபர்’ கூட்டு ராணுவப் பயிற்சி நிறுத்தப்பட்டது.
எம்ஆர்எச்-90 எனும் அந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து காணாமற்போன சம்பவத்தில் அதில் இருந்த நால்வர் மாண்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பிரிஸ்பேனில் இருந்து ஏறக்குறைய 890 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹேமில்டன் தீவிற்கு அருகே அந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் சனிக்கிழமை காலை அதனைத் தெரிவித்தார்.
காணாமற்போன ஹெலிகாப்டரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
‘தாலிஸ்மன் சேபர்’ கூட்டு ராணுவப் பயிற்சி இரு வாரங்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. அதில், 11 நாடுகளைச் சேர்ந்த 30,000க்கு மேற்பட்ட துருப்பினர் கலந்துகொள்வர் எனக் கூறப்பட்டது.


