மலேசியா: ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு

பிரசாரம் மும்முரம்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஆறு மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கிளந்தான், திரெங்கானு, கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் நாளான ஜூலை 29ஆம் தேதி சனிக்கிழமை தேர்தல் களத்தில் போட்டியிடும் அனைவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இதற்கு ஏதுவாக ஆறு மாநிலங்களிலும் மொத்தம் 173 வேட்புமனுத் தாக்கல் மையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

பிரதமர் அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேட்புமனுத் தாக்கலின்போது வருகைபுரிந்தனர்.

மலேசியாவின் ஆகப் பணக்கார மாநிலமான சிலாங்கூரில் ஆட்சியைக் கைப்பற்ற பல கட்சிகளும் முனைப்புடன் உள்ளன.

பிரதமர் அன்வார், வெளியுறவு அமைச்சரும் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளருமான ஸம்பிரி காதிர் ஆகியோர் சிலாங்கூரின் கோம்பாக்கில் இடம்பெற்ற ஆளுங்கட்சியினரின் வேட்புமனுத் தாக்கலின்போது உடனிருந்தனர். கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் தொகுதிகளாக விளங்குகின்றன.

கடந்த 15 ஆண்டுகளாகத் திரு அன்வாரின் கெஅடிலான் (பிகேஆர்) கட்சியே சிலாங்கூரில் ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இம்முறையும் அதனை அரியணை ஏறவிடாமல் தடுக்க முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினின் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன.

“எங்களது பேரணிகளில் பேரளவில் மக்கள் திரள்வதை நீங்கள் பார்க்கலாம். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்கு இதுவே வலுவான அறிகுறி. விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற பிரச்சினைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று செய்தியாளர்களிடம் திரு முகைதீன் கூறினார்.

இது வெறும் சட்டமன்றத் தேர்தல் மட்டுமன்று, அன்வார் அரசாங்கத்தின்மீது மக்களுக்கு இருக்கும் விரக்தியின், கோபத்தின் வெளிப்பாடாகவும் அமையும் என்றார் அவர்.

இதனிடையே, கோம்பாக்கின் சுங்கை துவா தொகுதியைத் தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளார் சிலாங்கூரின் இடைக்கால முதல்வர் அமிருடின் ஷாரி.

“கொவிட்-19 நோய்ப்பரவல், வெள்ளம், பொருளியல் பிரச்சினைகள் போன்ற சவால்மிக்க காலங்களில் நாங்கள் மேற்கொண்ட பணிகளைத் தொடர விரும்புகிறோம். நாங்கள் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றியதோடு பலவற்றையும் சாதித்திருப்பதற்கு இதுவே சான்று,” என்று திரு ஷாரி கூறினார்.

பெரிக்கத்தான் கூட்டணி சார்பில் ‘பாஸ்’ கட்சியின் இளையரணிச் செயலாளர் ஹனிஃப் ஜமாலுதீன் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

சிலாங்கூரின் முன்னாள் முதல்வரும் அம்மாநில பெரிக்கத்தான் கூட்டணித் தலைவருமான அஸ்மின் அலி, தமது முன்னாள் உதவியாளர் ஜுவரியா ஸுல்கிஃப்லியை எதிர்த்து ஹுலு கெலாங் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், தற்போது ‘பாஸ்’ கட்சியின் வசமிருக்கும் கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மூன்று மாநிலங்களிலும் அக்கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர். அதுபோல, பினாங்கு, நெகிரி செம்பிலான் என இரு மாநிலங்களையும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி தக்க வைக்கும் என்பதும் அவர்களது கணிப்பு.

181 இடங்களில் நேரடிப் போட்டி

இம்முறை ஆறு மாநிலங்களிலும் சேர்த்து 181 சட்டமன்றத் தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுவதாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கனி சாலே தெரிவித்துள்ளார்.

அத்துடன், 51 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும் 13 இடங்களில் நான்முனைப் போட்டியும் கெடாவில் மட்டும் ஒரே ஒரு தொகுதியில் ஐம்முனைப் போட்டியும் நிலவுகிறது என்று அவர் சொன்னார்.

பினாங்கில் பன்டாய் ஜெரஜாக் தொகுதியில் மலேசிய மக்கள் கட்சி (பிஆர்எம்) சார்பில் களமிறங்கியுள்ள 80 வயது ரவீந்தர் சிங்கே ஆக வயதான வேட்பாளர்.

அதுபோல, சிலாங்கூரின் புக்கிட் அந்தரபங்சா தொகுதியில் ‘மூடா’ கட்சி சார்பில் போட்டியிடும் 23 வயது மெலானி டிங் யின் ஹிலினே ஆக இளைய வேட்பாளர்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும் தொடங்கிய தேர்தல் பிரசாரம் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவுபெறும் என்று திரு சாலே கூறினார்.

மொத்தம் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கிளந்தானில் ஒரே ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பிரசாரக் காலத்தில் வேட்பாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 252 தேர்தல் அமலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!