ஜகார்த்தா: மனித உடல் உறுப்புகளைச் சட்டவிரோதமாக கடத்தும் கும்பல் ஒன்றில் ஈடுபட்டு இருந்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் பாலியைச் சேர்ந்த மூன்று குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அப்பாவி மக்களைக் கம்போடியாவுக்குக் கொண்டு சென்று அங்கு அவர்களின் சிறுநீரகங்களைத் திருடி விற்றுவிடும் சட்டவிரோதச் செயலில் அந்தக் கும்பல் ஈடுபட்டு வந்ததாக இந்தோனீசிய காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.
சட்டவிரோத மனித உடல் உறுப்பு வியாபாரக் கும்பல் ஒன்றைத் துடைத்தொழிக்கும் முயற்சிகளை அதிகாரிகள் தொடங்கி இருக்கிறார்கள். சென்ற வாரம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் காவல்துறை அதிகாரி ஒருவரும் குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவார்.
கைதாகி இருக்கும் மூன்று பாலி குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் ஏஹெச் என்ற கடத்தல் கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் அந்தக் கும்பலிடம் இருந்து லஞ்சம் வாங்கிக்கொண்டு கம்போடியாவுக்கு அப்பாவிகள் பலரை கடத்திச் செல்ல அந்தக் கும்பலுக்கு உதவி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பாலியில் கைதான அதிகாரிகள் சனிக்கிழமை ஜகார்த்தாவுக்கு கொண்டுவரப்பட்டு காவல்துறையின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டதாக ஜகார்த்தா காவல்துறை இயக்குநர் ஹெங்கி ஹரியாடி கூறினார்.
கடந்த மார்ச் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் பாலியில் இருந்து கம்போடியாவுக்கு குறைந்தபட்சம் 18 பேர் சென்று இருக்கிறார்கள் என்றும் அங்கு அவர்களின் சிறுநீரகத்தை விற்பனைக்குக் கொடுக்க வற்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். அப்படி யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தங்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

