விஸ்கான்சின்: அமெரிக்காவின் விஸ்கான்சின் விமான நிலையத்தில் சனிக்கிழமை நண்பகல் விமானக் காட்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது ஒரு ஹெலிகாப்டரும் ஒரு ஜைரோகாப்டரும் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; மேலும் இருவர் காயமுற்றனர்.
உயிரிழந்தவர்கள் விமானக் காட்சியில் பங்கேற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களது அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
உயிரிழந்த இருவரும் ஒரே விமானத்தில் பறந்தவர்களா என்பது பற்றித் தெரியவில்லை.
காயம் அடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சனிக்கிழமை மாலை நிலவரப்படி அவர்களது உடல்நிலை சீராக இருந்தது.
விபத்துக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. விமானங்களை ஆய்வு செய்து, விமானப் போக்குவரத்துத் தொடர்புகளைச் சேகரித்து, விபத்தை நேரில் கண்டறிந்தவர்களிடம் இருந்து தகவல் பெறுவதற்காக விசாரணை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்ததாக தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் தெரிவித்தது.