சிறுமிக்கு US$9.1மி இழப்பீடு; அமெரிக்க பள்ளிக்கூடம் தரும்

சிறுமிக்கு US$9.1மி இழப்பீடு; அமெரிக்க பள்ளிக்கூடம் தரும்

2 mins read
69237390-2736-4873-ae78-bb83bd4ba453
மல்லோரி என்ற இந்தச் சிறுமியின் மரணத்தை அடுத்து நியூஜெர்சி மாநிலத்தில் ‘மல்லோரி சட்டம்’ என்ற ஒரு சட்டம் சென்ற ஆண்டில் நடப்புக்கு வந்தது. - படம்: ஃபேஸ்புக்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சி பள்ளிக்கூட நிர்வாகம், 2017ஆம் ஆண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி ஒருவரின் பெற்றோருக்கு US$9.1 இழப்பீடு வழங்க இணங்கி இருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் இடம்பெறும் சட்டாம்பிள்ளைத்தன போக்குகள் தொடர்பான புகார்களுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுத்து அவற்றை முக்கியமானவையாகக் கருத நிர்வாகம் தவறிவிட்டது என்று அந்தச் சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. ராக்கவே டவுன்ஷிப் என்ற பகுதியில் செயல்படும் கோப்லேண்ட் நடுநிலைப் பள்ளியில், மல்லோரி என்ற சிறுமி முதலாண்டு படித்துக்கொண்டு இருந்தார்.

அந்த மாணவிக்கு அவரின் சக மாணவர்கள் குறுஞ்செய்தி முதலானவற்றைத் தொடர்ந்து அனுப்பி தொல்லை கொடுத்துவந்தனர்.

அது பற்றி பல முறை புகார் தெரிவிக்கப்பட்டபோதிலும் பள்ளிக்கூட நிர்வாகம் அந்தப் புகார்களில் போதிய கவனத்தைச் செலுத்தவில்லை,

அவற்றை முக்கியமானவையாகக் கருதவில்லை . கடைசியில் சிறுமி தன் உயிரையே மாய்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறி சிறுமியின் பெற்றோரான டியானியும் செத் கிராஸ்மேனும் வழக்குத் தொடுத்தனர்.

தீர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்க பள்ளிக்கூட தரப்பு மறுத்துவிட்டது.

சிறுமியின் மரணத்தை அடுத்து நியூஜெர்சி மாநிலத்தில் ‘மல்லோரி சட்டம்’ என்ற ஒரு சட்டம் சென்ற ஆண்டில் நடப்புக்கு வந்தது.

அந்தச் சட்டம் அந்த மாநிலத்தில் பள்ளிக்கூடங்களில் சட்டாம்பிள்ளைத்தனப் போக்கைத் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தடுத்து விடும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்