சிட்னி: அமெரிக்காவின் மாபெரும் படைப் பிரிவுகளை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய-அமெரிக்க ராணுவப் பயிற்சி மீண்டும் தொடங்கியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பயிற்சி நிறுத்தப்பட்டது.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘தாலிஸ்மன் சேபர்’ பயிற்சியில் 30,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவிலும் வடக்குப் பகுதியிலும் சனிக்கிழமை பயிற்சி மீண்டும் தொடங்கியது என்று ராணுவப் பயிற்சியின் இயக்குநர் டேமியன் ஹில் தொலைக்காட்சி செய்தியில் தெரிவித்தார்.
அதே சமயத்தில் காணாமல்போன நான்கு வீரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை இரவு பயிற்சியின்போது குவீன்ஸ்லாந்து மாநில கடற்பகுதியில் ஹேமில்டன் தீவுக்கு அருகே எம்ஆர்எச்90 ஹெலிகாப்டர் திடீரென காணாமல்போனது. அதில் இருந்த நான்கு வீரர்களும் காணாமல் போயினர். முக்குளிப்போர், காவல்துறை, கடற்படை கப்பல்கள் காணாமல் போனவர்களைத் தேடி வருகிறது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தால் இரண்டு வார பயிற்சித் திட்டமான ‘தாலிஸ்மன் சேபர்’ பாதிக்கப்பட்டது.
சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய-அமெரிக்க ஒற்றுமையைக் காட்டும் பயிற்சியாகவும் இது கருதப்படுகிறது.

