பெய்ஜிங்: பிலிப்பீன்ஸை குறிவைத்து இருக்கும் ‘கானுன்’ என்ற வெப்ப மண்டலப் புயல் சூறாவளியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது அடுத்த வாரம் சீனாவின் கடற்கரையைப் பதம் பார்க்கக்கூடும் என்று சீனாவின் வானிலை ஆய்வு நிலையங்கள் சனிக்கிழமை எச்சரித்தன.
பசிபிக் பெருங்கடலில் பிலிப்பீன்ஸ் தீபகற்பத்திற்கு கிழக்கே 1,000 கி.மீட்டருக்கும் அப்பால் இப்போது கானுன் புயல் மையம் கொண்டு இருக்கிறது.
அது பலமிக்க சூறாவளியாக மாறி செவ்வாய்க்கிழமை சீனாவின் மிக முக்கிய பொருளியல் மாநிலமான ஸிஜியாங்கில் கரையைக் கடக்கும் என்று சீன வானிலை ஆய்வு நிலையங்கள் தெரிவித்து இருக்கின்றன.
சீனாவைப் பொறுத்தவரை சூறாவளிக் காற்று என்பது பொதுவான ஒரு நிலவரமாக இருக்கிறது. அடிக்கடி அது சீனாவின் பெரும் நகரங்களை பாதித்துவிடும்.
சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 150 நகர்களில் வெள்ளம் ஏற்பட்டு வழக்கநிலை சீர்கெடும் நிலைமை இன்னமும் இருக்கிறது.
அந்த நகர்களில் போதிய அளவுக்கு வடிகால் ஏற்பாடுகள் இல்லை என்பதே இதற்கான காரணம். அப்படி அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் உள்ளூர் பொருளியலுக்குப் பாதிப்பு ஏற்படும். உயிர் சேதமும் ஏற்படுவதுண்டு.
மேற்கு பசிபிக் வட்டாரம் ஆகஸ்ட், செப்டம்பரில் அதிக சூறாவளிகளுக்கு இலக்காகக்கூடிய பூமியின் ஒரு பகுதியாகும்.
தொடர்புடைய செய்திகள்
உலகம் வெப்பமடைவதன் காரணமாக அடிக்கடி புயல் ஏற்படலாம். அப்படி ஏற்படக்கூடிய புயல் காற்று மிகவும் மூர்க்கமானதாக இருக்கக்கூடும் என்று அறிவியல் அறிஞர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
சீனாவில் வெள்ளிக்கிழமை ‘டுக்சுரி’ என்ற புயல் தாக்கியது. அதற்கு ஒரு வாரம் முன்னதாக ‘தாலிம்’ என்ற புயல் வீசி சேதத்தை ஏற்படுத்தியது. இப்போது ‘கானுன்’ புயல் சூறாவளியாக மாறி பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சீனாவின் வானிலை ஆய்வு நிலையங்கள் மக்களை எச்சரித்து இருக்கின்றன.

