தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாஸ்கோவில் உக்ரேனிய வானூர்தித் தாக்குதல்

1 mins read
0b328a31-0a2c-4de3-84a6-63eb3a8e9eb5
மாஸ்கோ நகரில் சேதமுற்ற அலுவலகக் கட்டடம் ஒன்றுக்கு வெளியே நிற்கும் அவசரகால சேவை ஊழியர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று உக்ரேனிய ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக அனைத்துலக விமான நிலையம் ஒன்றைத் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த வானூர்திகளில் ஒன்று மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்ற இரண்டு வானூர்திகள் மின்னணு ஆயுதங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாஸ்கோவும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் உக்ரேன்-ரஷ்யா போரின்போது அவ்வளவாக தாக்கப்படவில்லை. ஆனால், இவ்வாண்டு அப்பகுதிகள் பல்வேறு வானூர்தித் தாக்குதல்களுக்கு இலக்காகின.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி என ரஷ்யத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

இதில் இரு நகர அலுவலகக் கோபுரங்களின் முகப்பு லேசாக சேதமுற்றதாக மாஸ்கோ நகர மேயர் செர்ஜேய் சோபியானின் டெலிகிராமில் பதிவிட்டார்.

மாஸ்கோ அனைத்துலக விமானம் சற்று நேரம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, விமானச் சேவைகள் மற்ற விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டதாக அரசாங்க ஊடகம் குறிப்பிட்டது.

ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலைய செயல்பாடுகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிகிறது.

அமெரிக்கா, நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவு வழங்காவிட்டால் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு சாத்தியம் இருக்காது என ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்