மணிலா: பிலிப்பீன்ஸில் மலைப்பாங்கான பகுதிகளில் கடும் மழை பெய்யும். வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
‘கானுன்’ என்ற புயல் தீவிரமடைந்து சூறாவளியாக மாறும் என்பதே இதற்கான காரணம் என்று அது தெரிவித்து இருக்கிறது.
அடுத்த மூன்று நாட்களில் கானுன் புயல் தீவிரமடைந்து தன் நாச வேலையைக் காட்டும் என்று பகாசா என்ற பிலிப்பீன்ஸ் நாட்டின் வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி செய்தியில் எச்சரித்து இருந்தது.
அந்தப் புயல் சூறாவளியாக மாறி இன்று மாலை அல்லது நாளை அதிகாலை வீசத் தொடங்கும். செவ்வாய்க்கிழமை உச்சத்தை அது அடையும் என்று பகாசா தெரிவித்தது.
இதனிடையே, தலைநகர் மணிலாவையொட்டிய பகுதியில் ஓடும் மரிகினா என்ற ஆற்றின் நீர்மட்டம் சனிக்கிழமை 16.1 மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்தது. அந்த மட்டம் 18 மீட்டர் அளவைத் தொட்டால் மரிகினா நகரின் பல பகுதிகளில் இருந்தும் குடிமக்களை வெளியேற்ற வேண்டி இருக்கும் என்று உள்ளூர் நிர்வாகம் கூறியதாக பிலிப்பீன்ஸ் நாளிதழ் ஒன்று தெரிவித்தது.
பிலிப்பீன்ஸில் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 20 வெப்ப மண்டல புயல்கள் வீசுவதுண்டு என்று பகாசா தெரிவிக்கிறது.
அந்த நாட்டில் சென்ற வாரம் வீசிய டுக்சுரி என்ற புயல் காரணமாக S$31.5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சேதம் ஏற்பட்டது.
வேளாண்மைப் பயிர்கள் நாசமடைந்தன. பாலம், சாலைகள் பலவும் சேதமடைந்தன. இதனால் உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
டொக்சுரி புயல் காரணமாக 500,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். 14 பேர் மாண்டுவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
லூசோன் மாநிலத்தில் உள்ள 258க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கானுன் புயல் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது மணிக்கு 95 கி.மீ. முதல் 115 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசும் என்று பகாசா கூறி இருக்கிறது.

