பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பில் உக்ரேன்-அமெரிக்கா பேச்சு

பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பில் உக்ரேன்-அமெரிக்கா பேச்சு

2 mins read
555ed738-4f84-419e-9f63-a6957f6622f0
ரஷ்யப் படைகள் அனைத்தும் வெளியேறும்வரை மாஸ்கோவுடன் வேறு எந்தப் பேச்சிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என்கிறது உக்ரேன். - படம்: நியூயார்க் டைம்ஸ்

கியவ்: பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பில் அமெரிக்காவுடன் இந்த வாரம் பேச்சு தொடங்கவிருப்பதாக உக்ரேன் கூறியுள்ளது. உக்ரேன் நேட்டோ கூட்டணியில் இணைவதற்கான நடைமுறை இன்னும் நிறைவுபெறாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியின் தலைமை ஆலோசகர் ஆண்ட்ரி எர்மாக் ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் அதனைப் பதிவிட்டார்.

அதிபர் ஸெலன்ஸ்கியின் உக்ரேனிய அமைதித் திட்டம் குறித்துக் கலந்தாலோசிக்க பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் சவூதி அரேபியாவில் சந்திக்கத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யப் படைகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்ற அடைப்படையில் அந்த அமைதித் திட்டம் அமைந்திருக்கும்.

அத்திட்டம் மூன்று கட்டங்களாகக் கலந்தாலோசிக்கப்படும் என்றும் பின்னர் நாடுகளின் தலைவர்கள் நிலையில் சந்திப்பு இடம்பெறும் என்றும் கூறப்பட்டது.

சவூதி அரேபியச் சந்திப்பு, ஜெட்டாவில் ஆகஸ்டு 5, 6ஆம் தேதிகளில் நடைபெறும் என்று வால் ஸ்திரீட் ஜர்னல் நாளேடு தெரிவித்தது.

ஜூலை மாதம் லித்துவேனியாவில் நடைபெற்ற நேட்டோ உச்சநிலை மாநாட்டில் ‘ஜி-7’ நாடுகள் ஏற்கெனவே உறுதியளித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து அமெரிக்காவுடன் உக்ரேன் பேச்சு நடத்தவிருக்கிறது.

“உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள், வருங்காலத்தில் ரஷ்யா வலுச்சண்டைக்கு வந்தால் அதனை உக்ரேன் முறியடித்து,கட்டுப்படுத்த கைகொடுக்கும் வகையில், உறுதியானவையாகவும் நீண்டகால உதவிகளாகவும் அமையும். ஆதரவு நடைமுறை குறித்த தெளிவான வரையறுப்பை அவை கொண்டிருக்கும்,” என்று திரு எர்மாக் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

உக்ரேனுக்கு நேட்டோ கூட்டணியில் இடம் தரப்படும் வரை அந்தப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் நடப்பில் இருக்கும் என்றார் அவர்.

“ரஷ்யப் படைகள் முற்றிலுமாக உக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும், போருக்கு முன்பிருந்த உக்ரேனிய எல்லைகள் மீட்கப்படவேண்டும், சிறைக்கைதிகளும் உக்ரேனில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட குழந்தைகளும் தாயகம் திரும்ப வேண்டும்,” என்று அதிபர் ஸெலன்ஸ்கியின் அமைதித் திட்டம் வலியுறுத்துகிறது.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா உக்ரேன்மீது படையெடுத்தது முதல் இரு நாடுகளும் நடத்திய சில பேச்சுகள் தோல்வியடைந்தன.

ரஷ்யப் படைகள் அனைத்தும் உக்ரேனில் இருந்து வெளியேறும்வரை மாஸ்கோவுடன் இனி பேச்சில் ஈடுபடப் போவதில்லை என்கிறது உக்ரேன்.

குறிப்புச் சொற்கள்