கோலாலம்பூர்: மலேசியத் துணைப் பிரதமர் ஸாகித் ஹமிடி, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வாக்குகளை விலைகொடுத்து வாங்குவதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுகின்றன.
திரெங்கானுவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஒதுக்கீடுகள் உயர்த்தப்படும் என்று டாக்டர் ஸாகித் அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அவ்வாறு கூறுகின்றன.
மலேசியாவின் ஆறு மாநிலங்களில் ஆகஸ்டு 12ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திரெங்கானு, சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான் ஆகியவை அவை.
திரங்கானுவில் ஆளும் பாஸ் கட்சியும் மூடா கட்சியும் துணைப் பிரதமர் ஸாகித்தின் பிரசார உரை தொடர்பில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளன.
வெள்ளிக்கிழமை அங்கு பேசிய டாக்டர் ஸாகித், இளையர் அமைப்புகள் ‘ நீல-சிவப்பு’ அலைகளை உருவாக்கினால் 450,000 ரிங்கிட் ($132,000) மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அவரது பாரிசான் நேஷனல் கூட்டணி மற்றும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் நிறங்களைக் குறிக்கும் விதமாக டாக்டர் ஸாகித்தின் பேச்சு அமைந்திருந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமர் அன்வார் ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்பதே தமது நிலைப்பாடு என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இருப்பினும் டாக்டர் ஸாகித்தை அவர் துணைப் பிரதமராக நியமித்தபின் அந்த நிலைப்பாட்டை கவனிப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
பாரிசான் நேஷனல் கூட்டணித் தலைவரான டாக்டர் ஸாகித் மீது லஞ்சம், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது அதற்குக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் டாக்டர் ஸாகித்தின் பேச்சுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடர்பில்லை என்கிறார் பிரதமர் அன்வார்.
“ஆகஸ்ட் 12ஆம் தேதி சிவப்பு-நீலத்துக்கு வாக்களியுங்கள் என்று ஸாகித் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இது எப்படி சட்டமன்றத் தேர்தலுக்கு தொடர்பில்லாததாகும்?” என்று மூடா தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு மானியங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் அறிவிப்பது ஊழல் என்று பாஸ் கட்சி கூறுகிறது.
அரசாங்கத் திட்டம் என்பதால் மானிய ஒதுக்கீடுகளை ஊழலாகக் கருதுவதற்கு இடமில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் கூறியதாக மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.