இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் முன்னணி இஸ்லாமியக் கட்சி ஒன்றின் அரசியல் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குத் தானே பொறுப்பு என்று பாகிஸ்தானில் கூராசன் என்ற மாநிலத்தில் செயல்படும் ஐஎஸ்-கே என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
அந்தத் தாக்குதலில் 54 பேர் கொல்லப் பட்டனர். மாண்டவர்களில் 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜூவார் என்ற மாவட்டத்தில் கார் என்ற பகுதியில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ்-கே அமைப்பின் அமாக் என்ற பிரசாரப் பிரிவு தெரிவித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 83 பேர் காயம் அடைந்ததாக காவல்துறை கூடுதல் ஐஜி ஷக்காட் அப்பாஸ் தெரிவித்தார்.
“பலியானவர்களில் குறைந்தது 12 பேருக்கு வயது 12கூட ஆகவில்லை. மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியதாகவும் அதற்கு இரண்டு மணி நேரம் கழித்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அந்தத் தாக்குதலில் 12 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முதல் கட்ட விசாரணை மூலம்தெரிய வந்துள்ளது,” என்று மாவட்டக் காவல்துறை அதிகாரி நசீர் கான் கூறினார்.
அந்தத் தற்கொலைத் தாக்குதலை பல அனைத்துலக அமைப்புகளும் கண்டித்துள்ளன.