ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநிலம் மலேசியாவின் ஆளும் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் கோட்டையாகக் கருதப்பட்டாலும் அங்கு அந்தக் கூட்டணியின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கிறது.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினம் வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியாகின்றன.
ஆகஸ்ட் 12ஆம் தேதி வாக்களிப்பு நடைபெற இருக்கும் ஆறு மாநிலங்களில் பினாங்கு மிகவும் முக்கியமான மாநிலம். பக்கத்தான் ஹரப்பானும் தேசிய முன்னணியும் (பிஎன்) கூட்டு சேர்ந்து தேர்தலைச் சந்திக்கின்றன. அந்தக் கூட்டணியை எதிர்த்து பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.
பினாங்கு மாநிலத்தின் செபாராங் ஜெயா சட்டமன்றத் தொகுதியின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர் ஜொஹாரி காசிம், 62, கடந்த ஞாயிறன்று பசார் மலாம் எனப்படும் இரவுச் சந்தையில் வாக்கு வேட்டையாடினார். ஆனால், அவரை வரவேற்பதில் உற்சாகம் குறைந்திருந்தது. கடைக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் எதிர்பார்த்த அளவுக்கு ஆர்வம் இல்லை.
அதேநேரம் ஜொஹாரி வந்து சென்ற இருபது நிமிடங்களில் பெரிகத்தான் நேஷனல் வேட்பாளர் இஸார் ஷா ஆரிஃப் ஷா, 30, வந்தபோது அங்கிருந்தோரிடையே உற்சாகம் பெருக்கெடுத்து ஓடியது.
பலர் அவரை ஆரத்தழுவினர். வேறு சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். குழந்தைகளையும் இஸாருக்கு அறிமுகம் செய்தனர் சிலர்.
வரவிருக்கும் தேர்தலில் தமக்கு வாக்களிக்குமாறு மாண்டரின் மொழியில் இஸார் கேட்டுக்கொண்டதைக் கேட்ட சீன கடைக்காரர்கள் பரவசமடைந்தனர்.
இஸாருக்குத்தான் தமது ஓட்டு என்று இரவுச் சந்தையில் குளிர்பானம் விற்ற ஸுபைதா ஒத்மான், 36, கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“அண்மைக்காலமாக அவரை எங்களுக்குத் தெரியும். உதவிக்குரலுக்கு செவிசாய்க்கக்கூடியவர் இஸார்,” என்று ஸுபைதா தெரிவித்தார்.
அன்வார் இப்ராகிம் ஆட்சியில் விலைவாசி ஏற்றம் கண்டிருப்பதாக முஹம்மது யாஸிட் அகமது, 24, என்னும் கடை உதவியாளர் கூறினார்.
விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த அன்வார் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஓராண்டுக்கு முன்பு 5 ரிங்கிட்டுக்கு (S$1.50) விற்ற கோழிச் சோறு (சிக்கன் ரைஸ்) தற்போது 7 ரிங்கிட்டுக்கு (S$2) உயர்ந்துவிட்டதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருப்பது ஆளும் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பைக் குறைத்துள்ளதாகத் தெரிகிறது.

