5 குற்றச்சாட்டுகள்: சூச்சிக்கு மியன்மார் ராணுவம் மன்னிப்பு

5 குற்றச்சாட்டுகள்: சூச்சிக்கு மியன்மார் ராணுவம் மன்னிப்பு

1 mins read
74dbbd7a-fcdd-476b-9966-88d133cd78e4
ஆங் சான் சூச்சி - கோப்புப் படம்: ஏஎஃப்பி

யங்கூன்: ஈராண்டுகளுக்கு முன் அரசாங்கப் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூச்சிக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுகளை நீக்கி ராணுவத் தலைவர் மன்னிப்பு வழங்கி இருப்பதாக அரசாங்க ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.

ஐந்து குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டதால் திருவாட்டி சூச்சியின் சிறைத் தண்டனைக் காலத்தில் ஆறு ஆண்டுகள் குறையும் என்று லெவன் மீடியா குரூப் என்னும் ஊடகத்திடம் ராணுவப் பேச்சாளரான ஸாவ் மின் டுன் கூறினார்.

திருவாட்டி சூச்சியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் மியன்மார் அதிபர் வின் மைண்ட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் விலக்கப்பட்டு அவருக்கும் ராணுவ அரசாங்க நிர்வாகக் குழு மன்னிப்பு வழங்கியுள்ளது.

மன்னிப்பு வழங்கப்பட்டபோதிலும் இவ்விருவரும் தொடர்ந்து தடுப்புக்காவலில் இருப்பார்கள் என்று தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

78 வயதாகும் திருவாட்டி சூச்சி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். 2021ஆம் ஆண்டு அவரை ராணுவ ஆட்சியாளர்கள் தடுத்து வைத்தனர்.

ராணுவ நீதிமன்றம் அவருக்கு 33 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த வாரம் திருவாட்டி சூச்சி சிறையிலிருந்து அரசாங்கத்தின் உயர் பாதுகாப்புக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டதாகக் தகவல்கள் வெளியாயின. ஆயினும் அந்தத் தகவல்களை ராணுவ அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்