தெற்கு ஜப்பானில் சூறாவளி: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

2 mins read
48bc944f-feda-4fdf-b1e2-4f93a3de6e0f
ஆகஸ்ட் 1ஆம் தேதி தோக்கியோ ஹனேடா விமான நிலையத்திற்கு அருகே இருந்த கட்டடங்களைத் தாக்கிய மின்னல். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் தெற்குப்பகுதிகளை செவ்வாயன்று வலுவான சூறாவளி தாக்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

பசிபிக் கடலைக் கடந்து செல்லும் கானுன் சூறாவளி மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் ஒக்கினாவா வட்டாரத்தைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வட்டாரத்தில் உள்ள நகரங்களிலிருந்து குறைந்தது 370,00 பேரை வெளியேற்ற ஜப்பானிய வானிலை முகவை உத்தரவிட்டுள்ளது.

சூறாவளி தாக்கும்போது 12 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுவதால் தீவுக் கூட்டங்களை மூழ்கடிக்கும் என்று அது எச்சரித்துள்ளது.

சிங்கப்பூர் நேரம் செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் வானிலை முகவை அதன் சூறாவளி பற்றிய அறிவிப்பில் “மிகவும் வலிமையானது” மற்றும் “பெரியது” என்று சூறாவளியை விவரித்தது.

வட்டாரத் தலைநகரான நஹாவில் பலத்த காற்று மற்றும் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகளை முகவை வலியுறுத்தியுள்ளது.

“பலர் கான்கிரீட் வீடுகளில் வசிப்பதால் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கின்றனர்,” என்று ஒகினாவா வட்டார அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“ஆனால், தனிமையில் வசிப்பவர்கள் அல்லது தாழ்வான பகுதிகளில் மர வீடுகளில் வசிக்கும் மக்கள் சூறாவளியால் மோசமடைவதற்கு முன்பு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

செவ்வாயன்று 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, வட்டாரப் படகு மற்றும் பேருந்துச் சேவைகள் சூறாவளிக்கு முன்னதாக நிறுத்தப்பட்டன என்று தேசிய ஊடகமான என்எச்கே தெரிவித்தது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸின் விமானங்கள் செவ்வாய், புதன் கிழமைகளில் விமானம் ரத்து செய்யப்படுவதால் மொத்தம் 74,000க்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்