அலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் தற்காலிக முதலமைச்சரான சனுசி முகம்மது நூருக்கு பலர் மாறுபட்ட முறையில் ஆதரவு அளித்துள்ளனர்.
அவரின் மரியாதை சைகையைக் கொண்ட காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளது. அதே சைகையைச் செய்து காணொளிகளில் பதிவிட்டு அவற்றை அவரின் ஆதரவாளர்கள் பலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அத்தகைய 8,000க்கும் மேலான காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டன.
வரவிருக்கும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
திரு சனுசி, மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலைச் சேர்ந்தவர். தமக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சியில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையை உயர்த்தி சைகை செய்ததாகவும் திரு சனுசி கூறியிருந்தார்.
இதற்கிடையே, கெடா மாநிலத்தில் பாஸ் கட்சி பல முன்னாள் காற்பந்து வீரர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கியுள்ளது. அந்த மாநிலத்தைக் காற்பந்து மோகம் சூழ்ந்திருக்கிறது; தேர்தலில் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது இதற்குப் பின்னால் இருக்கும் காரணம்.
மலேசிய தேசிய அணியின் முன்னாள் அணித்தலைவரான 35 வயது பாட்ரோல் பாக்தியார், கெடா குழுவின் அணித்தலைவராக இருந்த 58 வயது ராதி மாட் தின் ஆகியோர் வரும் மாநிலத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

