கடும் வெயிலைப் பொருட்படுத்தாது போப்பைக் காணத் திரண்ட மக்கள்

1 mins read
e03484e6-e633-4a4b-a92b-416fe6561651
38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் பொருட்படுத்தாது, போப் பிரான்சிஸ் வருவதற்கு 8 மணி நேரம் முன்பாகவே பல்லாயிரக்கணக்கான இளையர்கள் வந்து காத்திருந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

லிஸ்பன்: போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமை போப் பிரான்சிஸைக் காண ஏறக்குறைய 1.5 மில்லியன் பேர் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாது பல மணி நேரம் அவர்கள் காத்திருந்தனர்.

உலக இளையர் தினத்தை அனுசரிக்கும் விதமாக மாலை நேரப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி நடைபெற்ற ‘பார்க் டெஜோ’ எனும் இடம் 100 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. அங்கு மக்கள் நிழலுக்கு ஒதுங்கும் வண்ணம் நிழற்குடைகள் ஏதும் கிடையாது. வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருந்தவேளையில் சிலர் தண்ணீர் போத்தல்களை நிரப்புவதற்கே 20 நிமிடங்கள் வரை காத்திருக்க நேரிட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொசாம்பிக்கைச் சேர்ந்த 18 வயதுப் பெண், தனது கிராமத்தை கொரில்லாக்கள் தாக்கியபோது வனப்பகுதியில் ஒளிந்துகொண்டிருந்ததைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து உரையாற்றிய போப், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நீண்ட உரைக்குப் பதிலாக சிறிது நேரமே உரை நிகழ்த்தினார். இறைவனின் அன்பைத் தவிர வாழ்க்கையில் வேறெதுவும் இலவசம் இல்லை என்று இளையர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக ஃபாத்திமா கத்தோலிக்க தேவாலயத்தில் கிட்டத்தட்ட 200,000 பேர் பங்குகொண்ட பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்