கியவ்: உக்ரேனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குபியன்ஸ்க் நகரில், தானம் பெற்ற ரத்தத்தை நோயாளிக்கு ஏற்றும் சிகிச்சை வழங்கப்படும் நிலையத்தின்மீது ரஷ்யா குண்டு வீசியதாக அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அந்த வான்வழித் தாக்குதலில், நிலையத்தில் இருந்த சிலர் மாண்டதாகவும் சிலர் காயமடைந்ததாகவும் டெலிகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தத் தகவலை உடனடியாகச் சரிபார்க்க இயலவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்க விரைந்ததாகக் கூறிய அதிபர் ஸெலென்ஸ்கி ரஷ்யாவின் செயல் ‘போர்க் குற்றம்’ என்று சாடினார்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.
உக்ரேன்மீதான படையெடுப்பில் ரஷ்யா பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறப்படுவதை மாஸ்கோ மறுத்து வருகிறது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெறும் போரில் உக்ரேனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மில்லியன்கணக்கானோர் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறினர்; பல நகரங்கள் சேதமடைந்தன.

