ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதல்: 78ஆம் ஆண்டு நிறைவு அஞ்சலி

2 mins read
e252623c-05f0-4d07-b8a9-fb5651b021d2
இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டுத் தாக்குதலில் பலியானோருக்காக ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச்சின்னத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். - படம்: இபிஏ

ஹிரோஷிமா: இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி 78 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நகர மேயர் கஸுமி மட்சுய் அணுவாயுதங்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என வலியுறுத்தினார். அணுவாயுதங்கள் போரைத் தடுக்கப் பயன்படும் என்று ‘ஜி7’ நாடுகளின் தலைவர்கள் விடுத்த அறிக்கை அறிவுபூர்வமானது அன்று என்றார் அவர்.

கடந்த மே மாதம் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ‘ஜி7’ உச்சநிலை மாநாட்டை ஹிரோஷிமாவில் ஏற்றுநடத்தினார். அதில், அணுவாயுதக் களைவு தொடர்பில் தங்கள் கடப்பாட்டைத் தெரிவித்த ‘ஜி7’ நாடுகளின் தலைவர்கள், அணுவாயுதங்கள் இருக்கும்வரை ஆக்கிரமிப்பையும் போரையும் தடுப்பதற்கு அவை பயன்படவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

நினைவஞ்சலி நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹிரோஷிமா மேயர், “தற்போது முன்வைக்கப்படும் அணுவாயுத மிரட்டல் தொடர்பான சில கருத்துகள் அணுவாயுதம் போரைத் தடுக்கும் என்ற கோட்பாடு தவறானது எனக் காட்டுவதை உலகத் தலைவர்கள் உணர வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னதாக, உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு அமைதிக்கான மணியொலி எழுப்பப்பட்டது. 1945ஆம் ஆண்டு இதே நாளில் ஹிரோஷிமா நகரின்மீது அணுகுண்டு வீசப்பட்ட நேரத்தைக் குறிக்கும் விதமாக அது ஒலித்தது.

வெளிப்புறத்தில் நடைபெற்ற அந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஏறக்குறைய 50,000 பேர் கலந்துகொண்டனர். ஹிரோஷிமா தாக்குதலில் தப்பிப் பிழைத்த சிலரும் அவர்களில் அடங்குவர். அணுகுண்டுத் தாக்குதலில் மாண்டோர் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜப்பானியப் பிரதமரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். “அணுவாயுதங்களற்ற உலகம் என்ற இலக்கிற்கான பாதை கடினமாகி வருகிறது. ரஷ்யாவின் அணுவாயுத மிரட்டல்களும் அதற்குக் காரணம். இருப்பினும் இலக்கை எட்டுவதற்கான அனைத்துலக ஆதரவு மிக முக்கியம் என்பதை அது உணர்த்துகிறது,” என்றார் திரு கிஷிடா.

இரண்டாம் உலகப் போரின்போது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ‘லிட்டில் பாய்’ எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை அமெரிக்கா வீசியதில் ஹிரோஷிமாவில் இருந்த ஆயிரக்கணக்கானோர் உடனடியாக உயிரிழந்தனர். அந்த ஆண்டு இறுதிக்குள் ஏறக்குறைய 140,000 பேர் மாண்டனர்.

மூன்று நாள்கள் கழித்து ஆகஸ்ட் 9ஆம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரில் மேலும் ஓர் அணுகுண்டை அமெரிக்கா வீசியது. 1945 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது.

குறிப்புச் சொற்கள்