மணிலா: சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் தென்சீனக் கடல் பகுதியில் ராணுவத்திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற பிலிப்பீன்ஸ் நாட்டு படகு ஒன்றை சீனாவின் கடலோரக் காவல்படை தடுத்துவிட்டது என்றும் அந்தப் படகு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தது என்றும் ஞாயிற்றுக்கிழமை மணிலா குற்றம் சுமத்தியது.
தன்னுடைய கலன்களுக்கு எதிராக சீனா இப்படி அளவுக்கு அதிகமாக பாதகமான முறையில் நடந்து வருவதை பிலிப்பீன்ஸ் கண்டித்தது.
இதன்தொடர்பில் பிலிப்பீன்சின் ஆயுதப்படைகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டன. வாடகைக்கு எடுக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் படகு தன்னுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் ஆனால், சனிக்கிழமை சீன கடலோரக் காவல்படையைச் சேர்ந்த ஒரு கலன், அந்தப் படகைத் தடுத்து அதன்மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பயமுறுத்தியதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.
படகில் இருந்தவர்களின் பாதுகாப்பு பற்றி சீனப் படை கவலைப்படவில்லை. அது அனைத்துலகச் சட்டத்தை மீறி நடந்து இருக்கிறது என்றும் அந்த அறிக்கை புகார் தெரிவிக்கிறது.
அந்தச் சம்பவம் இரண்டாவது தாமஸ் ஷோல் என்ற கடல் நீரில் மூழ்கி இருக்கும் பவளப்பாறைக்கு அருகே நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பவளப்பாறையை அயுஜின் ஷோல் என்று பிலிப்பீன்ஸ் குறிப்பிடுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட துருப்பிடித்துப் போன ஒரு கப்பல், 1999ஆம் ஆண்டு ஒரு நோக்கத்துடன் அந்தப் பாறை அருகே தரைதட்டி நிற்க வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பிலிப்பீன்சின் ராணுவ வீரர்கள் சிலர் இருந்து வருகிறார்கள்.
அந்த வீரர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு சென்ற இரண்டாவது படகையும் சீன கடலோரக் காவல்படை இத்தகைய ஆபத்தான செயல்கள் மூலம் தடுத்துவிட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, மணிலாவின் புகாருக்குப் பதிலளித்த சீனா, பிலிப்பீன்ஸ் படகுகள் தன்னுடைய கடல் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்ததாகவும் அதனால் அதற்கு எதிராக தான் அத்தியாவசியமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்ததாகவும் குறிப்பிட்டது.

