தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும்; தேர்தல் தாமதமாகலாம்

1 mins read
d2172e71-91da-4cd7-8e12-686e9c5eca83
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆதரவாளர்கள். - படம்: இபிஏ

இஸ்லாமாபாத்: இந்த வார இறுதியுடன் தமது ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளார்.

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அரசியல் நிலவரம் சூடுபிடித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற பேரணியில் பேசிய திரு ஷரிஃப், “ஆகஸ்ட் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தை நான் கலைக்கவுள்ளேன். அதைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் நடத்தப்படும்,” என்று கூறினார்.

கூட்டாட்சி, மாநிலத் தேர்தல்கள் 2024 வரை தாமதமாகலாம் என்ற ஊகம் நிலவி வருகிறது. மக்கள்தொகை குறித்த புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று திரு ஷரிஃப் கடந்த வாரம் கூறியிருந்ததே அதற்குக் காரணம்.

கடந்த சனிக்கிழமை சந்திப்பு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய திரு ஷரிஃப், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த ஆக அண்மைய தரவுக்கு ஒப்புதல் வழங்கினார். உலகிலேயே ஐந்தாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட பாகிஸ்தானில், மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க பொருளியல் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் நடத்த பாகிஸ்தானுக்கு நவம்பர் நடுப்பகுதி வரை அவகாசம் உள்ள வேளையில், வாக்காளர் பட்டியல்கள் மாற்றி அமைக்கப்பட்டு தொகுதிகள் மீண்டும் வரையப்பட வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை தேர்தல் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்