தோக்கியோ: ஜப்பானின் மத்திய வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளை கானூன் சூறாவளி நெருங்குவதால் பலத்த காற்றும் கனமழையும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி தென்மேற்கு ஜப்பானில் உள்ள வடகிழக்கு அமாமியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்தது.
முதலில் ஜப்பானின் நாகசாகி பகுதியை சூறாவளி தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் தென்கொரியாவில் உள்ள வடக்கு கடற்பகுதியை நோக்கி அது நகரும் என்று மையம் கணித்துள்ளது.
சூறாவளி படிப்படியாக வலுவிழக்கும். இருந்தாலும், அதன் வேகம் 108 கிலோ மீட்டருக்குக் குறையாது என்று முகவை தெரிவித்தது.
ஷிகோகு மற்றும் தெற்கு கியூஷுவில் முறையே 300 மி.மீட்டர், 400 மி.மீட்டர் அளவுக்கு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
“சூறாவளி மெதுவாக நகர்ந்து செல்லும். இதனால் நீண்ட நேரத்திற்கு சேதம் ஏற்படும். செவ்வாய், புதன்கிழமை பெய்யும் மழை, ஆகஸ்டு முழுவதும் எதிர்பார்க்கும் மழையையும் தாண்டிவிடும்,” என்று முகவை குறிப்பிட்டது.
இதற்கிடையே கார் தயாரிப்பு நிறுவனமான மாஸ்டா, தனது இரண்டு உள்ளூர் தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
அதிவேக ரயில் சேவையான ஷின்கான்சென்னும் புதன்கிழமை இரவு முதல் வியாழன் காலை வரை ஹகாடாவுக்கும் ஒசாகாவுக்கும் இடையிலான ரயில் சேவையை நிறுத்தி வைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா அணுகுண்டு போட்டு 78 ஆண்டுகளானதைக் குறிக்கும் நிகழ்ச்சியையும் பாதுகாப்பு காரணமாகப் பூங்காவிலிருந்து உள்ளரங்குக்கு நாகசாகி நகர நிர்வாகம் மாற்றியிருக்கிறது.