அமேசான் காட்டுவளத்தைக் காக்க எட்டு நாடுகள் இணக்கம்

அமேசான் காட்டுவளத்தைக் காக்க எட்டு நாடுகள் இணக்கம்

2 mins read
7aa258af-0440-4f7f-8c31-7e8e08f54ac5
அமேசான் ஊசியிலைக்காடுகள் பூமியின் பருவநிலை பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. - படம்: நியூயார்க் டைம்ஸ்

பிலெம் பிரேசில்: தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்று வடிகால் பகுதியில் அமைந்திருக்கும் எட்டு நாடுகளின் தலைவர்கள், சேர்ந்து செயல்பட்டு உலகின் ஆகப்பெரிய ஊசியிலைக் காட்டுப் பகுதியைப் பாதுகாக்க இணங்கி இருக்கிறார்கள்.

பிரேசில் அதிபர் லூலா டி சில்வா தலைமையில் அவர்கள் மிகமுக்கிய கூட்டத்தை நடத்தி அந்த இணக்கத்தை எட்டி இருக்கிறார்கள்.

அந்த உடன்பாட்டிற்கு ‘பிலெம் பிரகடனம்’ என்று பெயர். கூட்டம் நடந்த பிலெம் நகரின் பெயர் அதற்குச் சூட்டப்பட்டு இருக்கிறது.

தொழில்துறை வேளாண்மை காரணமாகவும் நிலப் பற்றுமானங்கள் காரணமாகவும் காட்டு வளம் அழிந்துவருகிறது. அமேசான் ஊசி இலைக்காட்டு வளம் அழிவதால் உலக அளவில் பருவநிலைக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

காட்டு வளம் அழிவதைத் தடுக்கும் நோக்கத்தில் அதற்கான வழிகாட்டி திட்டத்தை வரையறுக்க அந்த உடன்பாடு வகை செய்கிறது. அந்தக் கூட்டத்தில் புதன்கிழமை வேறு ஓர் உடன்பாடும் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காங்கோ, இந்தோனீசியா உள்ளிட்ட ஊசியிலைக் காடுகளைக் கொண்ட இதர நாடுகளுக்கு இடையே தனிப்பட்ட உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உலக அளவில் காட்டு வளங்களைப் பாதுகாப்பதில் மேலும் அணுக்கமாக ஒத்துழைக்க அந்த உடன்பாடு வகை செய்யும் என்று நம்பப்படுகிறது.

அமேசான் ஊசியிலைக்காடுகள் இந்த பூமியின் பருவநிலை பாதிப்புகளைத் தவிர்த்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.

வாயு மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவை அதிக அளவில் கிரகித்துக்கொண்டு அதைச் சேமித்து வைத்துக்கொள்வதில் அவை முக்கியமானவையாக உள்ளன. கடந்த 50 ஆண்டு காலத்தில் அந்தக் காடுகளில் 17% அழிந்துவிட்டது. அதைவிட அதிக பகுதி சேதமடைந்துவிட்டது.

பிரேசில் அதிபர் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் எட்டு நாடுகளுக்குள் ஐக்கியம் ஏற்பட்டு இருக்கிறது என்றாலும் பிரேசில் அதிபரின் இலக்கு நிறைவேறாமல் போய்விட்டது.

பொலிவியாவிலும் வெனிசுவேலாவிலும் காட்டு வள அழிவுக்கு 2030ல் முடிவு கட்டிவிட வேண்டும் என்றும் அந்த இரண்டு நாடுகளின் தலைவர்களிடம் இருந்து எப்படியாவது உறுதியைப் பெற்றுவிட வேண்டும் என்றும் பிரேசில் அதிபர் பெரிய அளவில் பல மாத காலமாகவே முயன்றார்.

ஆனால் இதில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அத்தகைய உறுதியை இதர ஆறு நாடுகளும் ஏற்கெனவே வழங்கி இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்