கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், முகைதீன் யாசினின் மருமகனையும் மற்றொரு நபரையும் கண்டுபிடிக்க இன்டர்போல் எனும் அனைத்துலகக் காவல்துறையின் உதவியை நாடியிருப்பதாக மலேசிய ஊடகமான ‘த ஸ்டார்’ தெரிவித்தது.
“குறிப்பிட்ட நாட்டில் அவர்கள் இருப்பதாக நம்புகிறோம். ஆனால் அவர்கள் இருக்கும் நாட்டின் பெயரை வெளியிட முடியாது,” என்று புதன்கிழமை அன்று செய்தியாளர் கூட்டத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாகி தெரிவித்தார்.
இருவரையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் அதற்குப் பலனில்லை. விசாரணையில் ஒத்துழைக்கத் தவறியதால் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
குடிநுழைவுத் துறை தகவல்களை ஊழல் தடுப்பு ஆணையம் அலசியதால் இருவரும் மே 17. மே 21 தேதிகளில் தனித்தனியாக நாட்டைவிட்டு வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு அவர்கள் நாடு திரும்பியதற்கான அடையாளம் காணப்படவில்லை.
அவர்களைக் கண்டுபிடிக்க அவர்களுடைய வழக்கறிஞர்கள் மூலமாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று வரை அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆணையம் கூறியது.
இதற்கிடையே முகைதீன் யாசின் மருமகன் முஹமட் அட்லான் பெர்ஹான் விசாரணையிலிருந்து தப்பிக்க மலேசியாவிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவதை அவரது வழக்கறிஞர் பால்ஜித் சிங் சித்து மறுத்துள்ளார்.
தமது கட்சிக்காரர் நாட்டைவிட்டு தப்பியோடியவராக சித்திரிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
வழக்குத் தொடுக்காமல் இருந்தால் அவர் மலேசியா திரும்புவார் என்று பால்ஜித் சிங் சித்து கூறினார்.